"E20 பெட்ரோலால் இன்ஜின் பாதிப்பா? ஆதாரம் இருந்தா சொல்லுங்க": மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்படும் E20 பெட்ரோல் திட்டம், வாகனங்களின் இன்ஜின் செயல்திறனை பாதிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 'விக்சித் பாரத் மாநாட்டில்' கலந்து கொண்டு பேசிய அவர், E20 பெட்ரோலால் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படும் புகார்கள் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படும் "பொய் பிரச்சாரங்கள்" என்று சாடியுள்ளார்.
சவால்
நிதின் கட்கரி விடுத்த பகிரங்க சவால்
"E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் நாட்டில் ஏதேனும் ஒரு கார் பழுதடைந்ததாகவோ அல்லது இன்ஜின் கோளாறு ஏற்பட்டதாகவோ வழக்கு உள்ளதா? அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரே ஒரு காரின் பெயரை உங்களால் சொல்ல முடியுமா? எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து திட்டமிட்டு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன" என்று சவால் விடுத்துள்ளார். மேலும், எத்தனால் திட்டத்தை ஆதரிப்பது தனது குடும்பத் தொழிலுக்காக என்ற விமர்சனத்திற்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். தனது குடும்பத்தினருக்கு சர்க்கரை ஆலைகள் இருப்பது உண்மைதான் என்றாலும், அவர்கள் எத்தனால் உற்பத்தியைச் சார்ந்து இல்லை என்றும், தனிப்பட்ட நன்மைகளுக்காக அரசு கொள்கைகள் வகுக்கப்படுவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
சர்ச்சை
எத்தனால் கலப்பால் என்ன சர்ச்சை?
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை பெருக்கவும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா ஏற்கனவே எட்டியுள்ளது. தற்பொழுது நாடு முழுவதும் E20 பெட்ரோல் தான் தரநிலையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வாகன ஓட்டிகள் மற்றும் விமர்சகர்கள் தரப்பில் சில முக்கியக் கவலைகள் முன்வைக்கப்படுகின்றன. சாதாரண பெட்ரோலை விட எத்தனால் கலந்த பெட்ரோல் குறைந்த மைலேஜ் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன. E20 எரிபொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களின் இன்ஜின்கள் மற்றும் எரிபொருள் குழாய்கள் நீண்ட கால பயன்பாட்டில் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உலகநாடுகளில் நுகர்வோர் தங்களுக்கு தேவையான எத்தனால் அளவு கொண்ட பெட்ரோலைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் இந்தியாவில் இல்லை.
லாபம்
விவசாயிகளுக்கு கிடைத்த லாபம்
இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள பொருளாதார நன்மைகளை அமைச்சர் கட்கரி பட்டியலிட்டார். குறிப்பாக, சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்க அனுமதித்த பிறகு, ஒரு குவிண்டால் சோளத்தின் விலை ₹1,200-லிருந்து ₹2,800 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில விவசாயிகளுக்குக் கூடுதலாக ₹45,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.