பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
இந்தியாவைச் சேர்ந்த நிதிச் சேவை வழங்கி வரும் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகச் செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். பாரத்பே நிறுவத்திலிருந்து விலகியிருப்பதாக தன்னுடைய லிங்க்டுஇன் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் அவர். அந்தப் பதிவில் கடந்த 3.5 ஆண்டுகளாக பாரத்பேயில் பணியாற்றியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்ததாகப் பதிவிட்டிருக்கிறார் அவர். கடந்த ஆண்டிலிருந்தே தொடர்ந்து பாரத்பே நிறுவனத்தின் பல்வேறு உயர் நிலை நிர்வாகிகள் பதவி விலகி வருகிறார்கள். தற்போது அந்நிறுவனத்திலிருந்து பதவி விலகியிருப்பதன் மூலம், பாரத்பேயிலிருந்த பதவி விலகிய முக்கிய அதிகாரிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார நிஷாந்த் ஜெயின்.
பாரத்பே நிறுவனத்திலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்:
முன்னதாக கடந்த வாரம், பாரத்பே நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான துருவ் தன்ராஜ் பால் பதிவி விலகினார். அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு, அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான விஜய் அகர்வால், போஸ்ட்பே தலைவரான நெகுல் மல்கோத்ரா மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரியா ரஜத் ஜெயின் ஆகியோர் பதவி விலகினர். மேலும், பாரத்பேயின் தொழில்நுட்ப துணை தலைவரான கீதான்ஷூ சிங்லா, தலைமை வருவாய் அதிகாரியான நிஷித் ஷர்மா மற்றும் பாரத்பேயின் துணை நிறுவனர்களுள் ஒருவரான பவிக் கொலாதியா ஆகியோரும் கடந்தாண்டு அந்நிறுனத்திலிருந்து பதவி விலகினர். பாரத்பேயில் இருந்து பதவி விலகிய அனைவருமே, அந்நிறுவனத்தின் முன்னார் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான அஷ்னீர் குரோவரின் பதவிக்காலத்தில் பணியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.