2008 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு மிக மோசமான சரிவு; நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 32% வீழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச் சந்தையின் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த சில நாட்களாகக் கடும் சரிவை சந்தித்து வருகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதியான இன்று, நிஃப்டி ஐடி குறியீடு 1.1% சரிந்தது. இது கடந்த 2025 டிசம்பரில் எட்டிய உச்சத்திலிருந்து 32% வீழ்ச்சியாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'லெஹ்மன் பிரதர்ஸ்' பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ஐடி துறை சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவே என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அச்சம்
ஏஐ தொழில்நுட்பத்தால் வந்த அச்சம்
இந்தத் தொடர் சரிவுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், இந்திய ஐடி நிறுவனங்கள் காலம் காலமாகப் பின்பற்றி வரும் 'அவுட்சோர்சிங்' முறைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஏஐ உதவியுடன் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டால், ஐடி நிறுவனங்களின் வருவாய் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
நிலை
முக்கியப் பங்குகளின் நிலை
இன்றைய வர்த்தகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் எல்டிஐ மைண்ட்ட்ரீ ஆகிய பங்குகள் தலா 1 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகளும் சரிவிலேயே வர்த்தகமாகின. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் ஐடி குறியீடு 9.5% சரிந்துள்ளது முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
எதிர்காலம்
எதிர்கால நிலை என்ன?
ஐடி நிறுவனங்கள் தற்போது ஒரு மாற்றுக் காலத்திற்குள் நுழைந்துள்ளன. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைச் சீரமைப்பது, ஏஐ தொழில்நுட்பத்தைத் தழுவுவது மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் வட்டி விகித மாற்றங்களும் இந்தச் சரிவுக்குக் கூடுதல் காரணங்களாக உள்ளன. எனவே, ஏஐ துறையில் வலுவான கால்தடத்தைப் பதிக்கும் நிறுவனங்கள் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.