மார்க் ஜுக்கர்பெர்க்குடன் மல்லுக்கட்டும் எலான் மஸ்க்; சண்டையை நேரலை செய்வதாக அறிவிப்பு
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடனான தனது கூண்டு சண்டையை(Cage Fight) ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், சண்டையை நேரடியாக ஒளிப்பரப்புவதாக உறுதி அளித்ததோடு, எல்லா வருமானமும் படைவீரர்களுக்கான சேமநல நிதிக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க் கூண்டு சண்டைக்கு தயாரா எனக் கேட்க, ஜுக்கர்பெர்க்கும் சண்டையிட ஒப்புக்கொண்டார். மேலும், சண்டையிடும் இடத்தை அனுப்பு என்ற தலைப்புடன் மஸ்க்கின் ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்தார்.
ஜியு-ஜிட்சு தற்காப்பு கலையில் நீல பெல்ட் வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்
கடந்த மாதம், ஜூக்கர்பெர்க் ஜப்பானிய தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜியு-ஜிட்சுவில் நீல பெல்ட்டைப் பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார். நீல பெல்ட்டை வாங்கிய பிறகு, தனது பயிற்சியாளர் டேவ் கேமரிலோவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவரும் தொடர்ந்து வாய்மொழி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அது குறைவதற்கான அறிகுறி எதுவும் தற்போதுவரை தென்படவில்லை. குறிப்பாக, ட்விட்டருக்கு போட்டியாக கருதப்படும் த்ரெட்ஸ் செயலியின் சமீபத்திய அறிமுகத்திலிருந்து அவர்களுக்கு இடையேயான வார்த்தைப் போர் மிகவும் அதிகரித்துள்ளது.