Loading...
சம்வத் 2083 ஆரம்பம்: 8 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக முகூர்த்த வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு 
8 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக முகூர்த்த வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

சம்வத் 2083 ஆரம்பம்: 8 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக முகூர்த்த வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு 

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) இந்திய பங்குச் சந்தைகளில் நடைபெற்ற சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 28.62 புள்ளிகள் சரிந்து 80,999.40 புள்ளிகளிலும், என்எஸ்இ நிஃப்டி 43.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,986.40 புள்ளிகளிலும் சம்வத் 2083-ஐத் தொடங்கியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக முகூர்த்த வர்த்தக நாளில் தொடர்ச்சியாக ஏற்றத்தைக் கண்டுவந்த இந்திய பங்குச் சந்தை, 2017-க்குப் பிறகு முதன்முறையாக சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கு நாடுகளின் போர் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை

இந்திய பங்குச் சந்தையின் இந்த சரிவிற்கு பல சர்வதேசக் காரணிகள் பின்னணியாக அமைந்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் சர்வதேச முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன்காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை $100-ஐத் தாண்டி உயர்ந்துள்ளதால், 80 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அந்நிய முதலீட்டாளர்கள்

அந்நிய முதலீட்டாளர்களின் அதிக அளவிலான பண வெளியேற்றம்

2026 நிதியாண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்திய பங்குச் சந்தையிலிருந்து சுமார் ₹4 லட்சம் கோடி ($42-45 பில்லியன்) மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

இந்தியாவில் பங்குகளின் விலை மதிப்பு உயர்ந்து காணப்பட்டதும், அமெரிக்கா, தைவான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை சார்ந்த நிறுவனங்களில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் உருவானதுமே இந்த பண வெளியேற்றத்திற்கான காரணமாகும்.

இந்திய உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளின் எஸ்ஐபி முதலீடுகள் கை கொடுத்தபோதிலும் அந்நிய விற்பனையை முழுமையாக ஈடுகட்ட இயலவில்லை.

ADVERTISEMENT

சந்தை எதிர்பார்ப்புகள்

வலுவடைந்த அமெரிக்க டாலர் மற்றும் சம்வத் 2083 சந்தை எதிர்பார்ப்புகள்

அமெரிக்க பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்தைக் கடந்து உயர்ந்ததால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது மூலதனத்தை பாதுகாப்பான டாலர் பத்திரங்களுக்கு மாற்றினர்.

இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 97.12 வரை சரிந்து இந்தியச் சந்தையின் மீதான வருவாயைக் குறைத்தது.

புதிய சம்வத் 2083 கணக்கு ஆண்டில், பங்குகளின் விலை மதிப்பைக் காட்டிலும் நிறுவனங்களின் உண்மையான லாப வளர்ச்சியே சந்தையின் போக்கையும் லார்ஜ்-கேப்/மிட்கேப் பங்குகளின் எழுச்சியையும் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ADVERTISEMENT