Loading...
மத்திய கிழக்கு பதற்றத்திலும் இந்திய பொருளாதாரம் அபாரம்! நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியது மூடிஸ்
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியது மூடிஸ்

மத்திய கிழக்கு பதற்றத்திலும் இந்திய பொருளாதாரம் அபாரம்! நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியது மூடிஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2026
06:41 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி (Real GDP) வளர்ச்சி கணிப்பை முந்தைய 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் காட்டியுள்ள வலுவான மீள்தன்மையை சுட்டிக்காட்டி இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளில் இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது.

இந்தியாவிற்கான மதிப்பீடு

இந்தியாவிற்கு Baa3 மதிப்பீடு மற்றும் சாத்தியமான பொருளாதார அபாயங்கள்

அதேவேளையில், இந்தியாவின் Baa3 நீண்டகால கடன் மதிப்பீட்டை மூடிஸ் மாற்றமின்றி தக்க வைத்துள்ளது.

நாட்டின் அதிகப்படியான பொதுக் கடன், பலவீனமான கடன் திறன் மற்றும் குறைந்த தனிநபர் வருமானம் ஆகியவை நாட்டின் கடன் சுயவிவரத்திற்கு சவாலாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயர்ந்து வரும் ஆற்றல் விலைகள் (எண்ணெய் விலை) மற்றும் எல் நினோ காரணமாக ஏற்படும் உணவுப் பொருள் விலை உயர்வு ஆகியவை பணவீக்கம் மற்றும் நுகர்வில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது.

7.8 சதவீத வளர்ச்சி

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.8% பிரமாண்ட வளர்ச்சி

கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

முதலீடுகள் மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட பிரமாண்ட வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தை எதிர்பார்த்ததை விட வேகமான பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

சர்வதேச ஆற்றல் விலை உயர்வாலும், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் அதிகரிப்பதாலும் அரசின் மானிய செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்ற போதிலும், இந்தியாவின் அடிப்படை பொருளாதார கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கிராமப்புற பொருளாதாரம்

எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனத்தின் மதிப்பீடும் கிராமப்புற பொருளாதாரமும்

முன்னதாக எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நீண்டகால கடன் மதிப்பீட்டை BBB என உறுதிப்படுத்தியிருந்தது.

விவசாயத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் 18 சதவீத பங்களிப்பையும், 43 சதவீத வேலைவாய்ப்பையும் வழங்கி வரும் நிலையில், எல் நினோ பருவமழை பாதிப்புகள் கிராமப்புற பொருளாதாரத்தை சற்று பாதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சேவைத் துறை, உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் இந்தியாவின் வளர்ச்சியை தொடர்ந்து சீராக பராமரிக்கும்.

ADVERTISEMENT