LOADING...
மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் 23,000 பேருக்கு வேலை பறிபோகிறதா?
ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன Meta மற்றும் Microsoft

மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் 23,000 பேருக்கு வேலை பறிபோகிறதா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2026
08:12 am

செய்தி முன்னோட்டம்

டெக் உலகின் ஜாம்பவான்களான மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகரித்து வரும் முதலீடுகளை சமாளிக்கவும், நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. அப்போது, AI முதலீடுகளால் நிறுவனத்தின் லாப வரம்பு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

மெட்டா

மெட்டாவின் 8,000 ஆட்குறைப்பு நடவடிக்கை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா, தனது மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்தை (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வரும் மே 20 முதல் தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி ஜனெல்லே கேல் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இது தவிர, ஏற்கனவே காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என்றும் மெட்டா முடிவு செய்துள்ளது. AI உள்கட்டமைப்பிற்காக இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விருப்ப ஓய்வுத் திட்டம்

மற்றொருபுறம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 51 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் 'விருப்ப ஓய்வு' (Voluntary Buyouts) திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 1.25 லட்சம் ஊழியர்களில் சுமார் 8,750 பேர் (7 சதவீதம்) இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். ஒரு ஊழியரின் வயது மற்றும் அவர் நிறுவனத்தில் பணியாற்றிய ஆண்டுகளின் கூடுதல் 70 அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர்கள் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொண்டு கௌரவமாக வெளியேறலாம். நிறுவனத்தின் வேகமான செயல்பாட்டிற்கு இது அவசியம் என்று அதன் தலைமை மக்கள் அதிகாரி ஆமி கோல்மேன் விளக்கியுள்ளார்.

Advertisement

AI

AI முதலீடுகளும் நிதி அழுத்தமும்

இந்த இரண்டு நிறுவனங்களுமே AI தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை கொட்டி வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் புதிய தரவு மையங்களை (Data Centers) அமைக்க முதலீடு செய்துள்ளது. மெட்டா நிறுவனம் AI நிபுணர்களுக்கு அதிக சம்பளம் வழங்கி வருவதால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவு 162 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவுகளை ஈடுகட்டவே, மற்ற பிரிவுகளில் உள்ள ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் டெக் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ற்கனவே கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு ஐடி (IT) ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement