LOADING...
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்! இனி ட்ரெயினில் போகும் போதே லூலூ மாலில் ஷாப்பிங் செய்யலாம்
ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் 'லூலூ ஹைப்பர் மார்க்கெட்' விரைவில் திறக்கப்பட உள்ளது

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்! இனி ட்ரெயினில் போகும் போதே லூலூ மாலில் ஷாப்பிங் செய்யலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2026
12:16 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை வெறும் போக்குவரத்துக்கான இடமாக மட்டும் வைக்காமல், பயணிகள் எளிதாகத் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லும் மினி வணிக மையங்களாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையின் முக்கிய மெட்ரோ நிலையங்களில் ஒன்றான ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற 'லூலூ ஹைப்பர் மார்க்கெட்' விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான கிரேஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து லூலூ குரூப் இந்த மினி மாலை அமைத்து வருகிறது.

விவரங்கள்

1 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட வணிக வளாகம்

ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் அடித்தளப் பகுதியில் சுமார் 1.12 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மளிகை பொருட்கள், பேக்கரி உணவுகள் மட்டுமின்றி, நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஆடம்பர ஃபேஷன் ஆடைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரீமியம் ரக பொருட்கள் என அனைத்தும் கிடைக்க உள்ளன. ஷெனாய் நகர் மெட்ரோ நிலையத்தின் மேல் பகுதியில் ஏற்கனவே திரு.வி.க பூங்கா புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது இதன் தரைப்பகுதியில் அமையவிருக்கும் லூலூ வளாகத்தில், ஷாப்பிங் தவிர 'ஃபன் சிட்டி', உணவகங்கள் மற்றும் திரையரங்கமும் வரவுள்ளது. இது அண்ணா நகர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பெரிய பொழுதுபோக்கு மையமாக மாறும்.

கூடுதல் வசதிகள்

மெட்ரோ பயணிகளுக்குக் கிடைக்கும் கூடுதல் வசதிகள்

வேலை முடிந்து வீடு திரும்பும் பயணிகள் தங்களின் பயணத்தின் போதே, இந்த லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்துவிட்டு, மீண்டும் மெட்ரோ ரயிலில் ஏறி தங்களின் இல்லங்களை அடையலாம். பயணிகளின் வசதிக்காக, அவர்கள் வாங்கும் பொருட்களை எடுத்துச் செல்லும் ஷாப்பிங் கார்ட்களை மெட்ரோ பிளாட்பார்ம் வரை கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலையத்தில் 400-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான பிரம்மாண்ட வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement