'பக்கார்டி' நிறுவனத்தின் CEO-வாக செயல்பட்டு வரும் தமிழரைப் பற்றித் தெரியுமா?
உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பதவியை இந்தியர்கள் அலங்கரித்து வருகிறார்கள். உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் தமிழரைப் பற்றித் தெரியுமா? சென்னையில் பிறந்த மகேஷ் மாதவன் என்பவர் தான், கியூபாவை தாயகமாகக் கொண்ட 'பக்கார்டி' மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக பக்கார்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மகேஷ் மாதவன், கடந்த 2017-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, உலகின் பல்வேறு சொகுசு ஆடை தயாரிப்பு பிராண்டுகளை தன்வசம் வைத்திருக்கும் கேப்ரி ஹோல்டிங்ஸ் லிமிடட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ஒருவராகவும் கடந்த ஏப்ரலில் நியமிக்கப்பட்டிருக்கிறார் மகேஷ் மாதவன்.
மகேஷ் மாதவன் யார்?
1964-ல் சென்னையில் பிறந்தவர் மகேஷ் மாதவன். ராமையா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், 1988-ல் SP ஜெயின் கல்லூரியில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். 1997-ம் ஆண்டு பக்கார்டி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார் மகேஷ். அதற்கு முன்னர் போர்க் கப்பல்களை கட்டும் நிறுவனமொன்றில் பொறியாளராகப் பணியாற்றியிருக்கிறார். பக்கார்டி நிறுவனத்தில் இணைந்து, ஆசியா, மத்தியக்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அந்நிறுவனத்தின் வணிகத்தை நிர்வகித்திருக்கிறார். பின்னர், பக்கார்டி நிறுவனத்தின் ஐரோப்பிய பகுதியின் வணிகத்தை தலைவராக மேற்பார்வையிட்ட வந்தவர், 2017-ம் ஆண்டு மைக் டோலனுக்கு அடுத்து பக்கார்டியின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 2023-ன் படி அவரது சொத்து மதிப்பு, 3.55 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்.