ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO முதல் நாளிலேயே வரலாற்றுச் சாதனை: 100 நிமிடங்களில் முழுமையாக நிரம்பிப் புதிய மைல்கல்
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ரூ.30,213 கோடி மதிப்பிலான பொதுப்பங்கீடு(IPO) இன்று தொடங்கியது. துவங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்று, இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. ரூ.30,213 கோடி நிதித் திரட்டல் மூலம், இதற்கு முன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா படைத்த ரூ.27,870 கோடி ஐபிஓ சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் பங்கீடாக உருவெடுத்துள்ளது. ஐபிஓ துவங்கிய 100 நிமிடங்களுக்குள் 100% பங்குகளும் விண்ணப்பிக்கப்பட்டு முழுமையாக நிரம்பியது. சமீபத்திய மெகா ஐபிஓ-க்களில் இவ்வளவு விரைவாக நிரம்பியது இதுவே முதல்முறை. பெருநிறுவன மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவு ஐபிஓ தொடங்கிய வெறும் 28 நிமிடங்களிலேயே முழுமையாக நிரம்பி சாதனை படைத்தது.
ஐபிஓ
ஹூண்டாய், எல்ஜி சாதனைகள் முறியடிப்பு
ஹூண்டாய் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் மெகா ஐபிஓ-க்கள் ஏற்கனவே இருந்த பங்குகளை விற்பனை செய்யும் (OFS) முறையில் வந்த நிலையில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் முற்றிலும் புதிய பங்குகளை வெளியீட்டு நிதி திரட்டுகிறது.
ஹூண்டாய் ஐபிஓ முதல் நாளில் 18% மட்டுமே நிரம்பிய நிலையில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் முதல் நாள் காலை 11:30 மணி நிலவரப்படியே 1.28 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது.
மொத்தமாக வழங்கப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு எதிராக 25.20 கோடி பங்குகளுக்குப் போட்டாபோட்டியாக விண்ணப்பங்கள் குவிகின்றன. இந்த ஐபிஓ வரும் அக்டோபர் 23 வரை திறந்திருக்கும்.