பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்
பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ்(இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் அவர்களது மகன் நிவான் கோயல் ஆகியோரின் பெயரிலும் நிறுவனத்தின் பெயரிலும் இருந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 17 அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்டுகள், பங்களாக்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் அடங்கும். பணமோசடி தடுப்புச் சட்டம்(PMLA), 2002-ன் கீழ் குறைந்தபட்சம் ரூ. 538 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்தது.
கனரா வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த ஜெட் ஏர்வேஸ்
பறிமுதல் செய்யப்பட்ட சில சொத்துக்கள் ஜெட்டேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜெட் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய பெயர்களிலும் பதிவு செய்யப்பட்டிருத்தன. கனரா வங்கி தாக்கல் செய்த மோசடி வழக்கில் நரேஷ் கோயல் மற்றும் 5 பேர் மீது அமலாக்க இயக்குநரகம் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கனரா வங்கி ரூ.848 கோடி வரை கடன் வழங்கி இருக்கிறது. ஆனால், அந்த கடன் தொகையில் 538 கோடி ரூபாயை ஜெட் ஏர்வேஸ் திருப்பி செலுத்தவில்லை. இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு கீழ் நரேஷ் கோயலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.