இன்சூரன்ஸ் கமிஷனுக்கு செக்! ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள்? ஐஆர்டிஏஐ அதிரடித் திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் காப்பீட்டுப் பாலிசிகளை விற்பனை செய்யும் நடைமுறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி வாரியம் (ஐஆர்டிஏஐ) தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதன்படி, இன்சூரன்ஸ் முகவர்கள், புரோக்கர்கள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகைகளுக்கு உச்சவரம்பு விதிக்கும் புதிய நடைமுறை வரும் ஜனவரி 1 அல்லது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என ஐஆர்டிஏஐ விநியோகப் பிரிவு உறுப்பினர் கிரிஜா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
காரணங்கள்
புதிய கமிஷன் விதிகளுக்கான முதன்மைக் காரணங்கள்
கடந்த 2023 ஆம் ஆண்டில் விநியோக விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு, காப்பீட்டுப் பிரீமியம் தொகையை விட முகவர்களுக்கான விநியோகக் கமிஷன்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளதாக ஐஆர்டிஏஐ சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செலவின விகிதம் 16 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செலவு விகிதம் 25 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
முகவர்களுக்கு அடிப்படை கமிஷனுடன் சேர்த்து 30% முதல் 60% வரை கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதால், பாலிசிகளின் வாங்கும் செலவைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கிராமங்கள்
கிராமப்புற பாலிசி விற்பனைக்கு கூடுதல் ஊக்கத்தொகை
கமிஷன் தொகைகளைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இன்சூரன்ஸ் விநியோகத்தை ஊக்குவிக்க ஐஆர்டிஏஐ சிறப்பு சலுகைகளை முன்மொழிந்துள்ளது.
10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறு நகரங்களில் விற்கப்படும் பாலிசிகளுக்குப் பொருந்தக்கூடிய கமிஷன் வரம்பில் கூடுதலாக 10 சதவீதமும், 50,000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமப்புற பகுதிகளில் கூடுதலாக 20 சதவீத ஊக்கத்தொகையும் முகவர்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்சூரன்ஸ் ஊடுருவல் இல்லாத பகுதிகளுக்கும் சேவை சென்றடையும்.
கருத்துக் கேட்பு
5 ஆண்டுகள் வரை அவகாசமும் கருத்துக்கேட்பும்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது செலவுகளை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு புதிய வரம்புகளுக்கு ஏற்ப மாறுவதற்கு 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்க ஐஆர்டிஏஐ திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், தவறான பாலிசி விற்பனையைத் தவிர்க்கும் பொருட்டு கமிஷன் உச்சவரம்பை விரைவாக அமல்படுத்த ஒழுங்குமுறை அமைப்பு விரும்புகிறது.
இந்த வரைவு விதிகளுக்கு வரும் அக்டோபர் 25-க்குள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்குப் பிறகே இறுதி ஒழுங்குமுறை விதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.