LOADING...
போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி
இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது

போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2026
06:24 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் இன்று 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. இந்த போர் நேரடியாக இந்தியாவை பாதிக்கவில்லை என்றாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. இந்த போரால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து ஒரு பார்வை:

#1

பெட்ரோல், டீசல் மற்றும் போக்குவரத்து

ஈரான் 'ஹார்முஸ் ஜலசந்தியை' மூடியுள்ளதால், உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் 20 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 83 டாலராக உள்ளது. இந்தியா தனது தேவையில் 88 சதவீத எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், இது எரிபொருள் விலையை உயர்த்தும். தற்போது வரை சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், போர் நீடித்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.

#2

சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள்

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை லிட்டருக்கு ₹1 முதல் ₹3 வரை ஏற்கனவே உயர்ந்துள்ளது. கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பருப்பு வகைகளின் வரத்து பாதிக்கப்பட்டால், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு விலை அடுத்த ஒரு வாரத்தில் உயரும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

#3

உலர் பழங்கள்

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து வரும் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, குங்குமப்பூ மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றின் வரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஏற்கனவே பதற்றம் நிலவுவதால், ஈரானிய துறைமுகங்கள் வழியாக வந்த இந்த சரக்குகள் இப்போது தடைபட்டுள்ளன. இதனால் உலர் பழங்களின் விலை இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.

Advertisement

#4

விமானக் கட்டணம் மற்றும் பயணம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மார்ச் 3 வரை சுமார் 12,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் செலவு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரித்துள்ளதால், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான டிக்கெட் விலைகள் பலமடங்கு உயரும்.

#5

பிளாஸ்டிக் மற்றும் மருந்துகள்

கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் துகள்களின் விலை கடந்த இரண்டு நாட்களில் 12% உயர்ந்துள்ளது. இது பிளாஸ்டிக் சார்ந்த அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தும். மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் (APIs & Chemicals) ஐரோப்பாவிலிருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை உயரும் அபாயம் உள்ளது.

Advertisement