ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்; நாஸ்காம் கண்டனம்
ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஐடி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு கிளைகளில் இருந்து சேவைகளைப் பெறுவதற்கும், ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ் சேவைகளை இறக்குமதி செய்ததற்கும் ரூ.32,403.46 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளது என்று இன்ஃபோசிஸுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஜூலை 2017 முதல் மார்ச் 2022 வரையிலான காலத்திற்கு கணக்கிடப்பட்டது. இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், நாஸ்காம் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக தற்போது களமிறங்கியுள்ளது.
நாஸ்காம் அறிக்கையின் முழு விபரம்
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயல்பாட்டு மாதிரியின் தவறான புரிதலை இந்த அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளது. நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதையும், வணிகம் செய்வதை எளிதாக்குவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதையும் தவிர்க்க, ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசு சுற்றறிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாஸ்காம் கூறியுள்ளது. இதற்கிடையே, தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்கவும், சந்தை ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஐடி துறையின் செயல்பாட்டு மாதிரியை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துவதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.