காஃபி டே நிறுவனத்தின் மீது திவால் வழக்கு பதிந்த இன்டஸ்இந்த் வங்கி
கஃபே காஃபி டே கடைகளை இயக்கி வந்த காஃபி டே குளோபல் வணிக நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) திவால் வழக்கு பதிந்திருக்கிறது இன்டஸ்இந்த் வங்கி. கஃபே காஃபி டேயின் நிறுவனற் VG சித்தார்த் கடந்த 2019-ல் மறைந்ததில் இருந்தே, அந்நிறுவனம் பெரும் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக அந்நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க, தலைமைப் பொறுப்பில் இருந்து முயற்சித்து வருகிறார் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே. இந்நிலையில், இன்டஸ்இந்த் வங்கிக்கும், காஃபி டே குளோபல் நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள நிறுவனத் தீர்ப்பாயத்தில் திவால் வழக்கு பதிந்திருக்கிறது இன்டஸ்இந்த் வங்கி.
ஏன் வழங்கு பதிந்தது இன்டஸ்இந்த் வங்கி?
காஃபி டே குளோபல் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின் படி, கடந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி இன்டஸ்இந்த் வங்கிக்கு அந்நிறுவனம், ரூ.67.3 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த தொகையைத் திரும்பப் பெறுவது குறித்தே இரு நிறுவனங்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்திருக்கிறது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தீர்ப்பாயத்தில் வழக்கு பதிந்திருக்கிறது இன்டஸ்இந்த். இது குறித்த மேலதிக தகவல்களை இரு நிறுவனமுமே பகிர்ந்து கொள்ளவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.189.63 கோடி செயல்பாட்டு வருவாயைப் பதிவு செய்திருக்கிறது காஃபி டே குளோபல். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், நஷ்டத்தையும் கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைத்திருக்கிறது காஃபி டே குளோபல்.