இண்டிகோ விமான நிறுவனத்தில் அதிரடி மாற்றம்! சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் விலகல்; மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்த நிறுவனர்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜினாமா செய்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு விமான சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறுகளைத் தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனருமான ராகுல் பாட்டியா, நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
இண்டிகோ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை
இண்டிகோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பீட்டர் எல்பர்ஸ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார். அவரது பங்களிப்பிற்கு இண்டிகோ குழுமம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இடைக்காலமாக, மேலாண் இயக்குநர் ராகுல் பாட்டியா நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனிப்பார். விரைவில் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
ராகுல் பாட்டியா
ராகுல் பாட்டியா மற்றும் வாரியத்தின் கருத்து
இண்டிகோ வாரியத்தின் தலைவர் விக்ரம் சிங் மேத்தா கூறுகையில், "நிறுவனத்தின் கலாச்சாரத்தைப் பலப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் ராகுல் பாட்டியா மீண்டும் மேலாண்மைப் பொறுப்பை ஏற்கிறார்" எனத் தெரிவித்தார். பதவியேற்பு குறித்து ராகுல் பாட்டியா பேசுகையில், "கடந்த 22 ஆண்டுகளாக இண்டிகோவை உருவாக்கி வளர்த்தவன் என்ற முறையில், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது எனக்கு ஆழ்ந்த பொறுப்புணர்வு உள்ளது. தொழில்முறை மேலாண்மை மற்றும் நம்பகமான சேவையுடன் இந்திய மக்களுக்கு இண்டிகோ தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கும்." என்று கூறினார்.