3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை
எப்போதும் இல்லாத வகையில் மிக அதிக மதிப்பை அடைந்திருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை. தற்போது 3.8 ட்ரில்லியன் சந்தையாக உருவெடுத்திருக்கிறது இந்தியா. இது 2020ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட சரிவின் போது இருந்த மதிப்பை விட மும்மடங்கு அதிகமாகும். இதே காலகட்டத்தில் அமெரிக்க பங்குச்சந்தையானது இருமடங்கு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது. உலகளாவிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு நடக்கும் நேரத்தில், இந்திய பங்குச்சந்தை இந்த உயரத்தை எட்டியிருப்பது மற்ற நாட்டு தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் எனத் தெரிவித்திருக்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், அதிகரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் மற்றும் எதிர்பாராத வகையில் அதிகரித்திருக்கும் சில்லறை முதலீட்டாளர்களே இந்திய பங்குச்சந்தையில் இந்த மதிப்பீட்டிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
வளர்ச்சிப் பாதையில் இந்தியா:
இந்திய பங்குச்சந்தைய இந்த உயரத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும், தற்போது ஆசிய சந்தைகளில் இந்தியாவிலேயே தாங்கள் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த 2023ம் ஆண்டில் மட்டும் 16 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு இந்திய பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். தயாரிப்பின் தாயமகமான சீனாவில் இருந்து தங்கள் முதலீடுகளை பிற நாடுகளுக்கு மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, சீனாவில் நிச்சயமற்ற பொருளாதார நிலை நிலவிவரும் நிலையில், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வருகிறது இந்தியா. இந்தியாவில் முதலீடு செய்வர்களுக்கு பல்வேறு வகையில் சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது இந்தியா.
இந்தியா சந்திக்கவிருக்கும் சிக்கல்கள்:
இது இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கிடையில் சில சிக்கல்களை இந்தியா சந்திக்கவிருப்பதாக அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது, இந்தியாவில் விலை வாசி உயர்வை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசியத் தேவைகளான தக்காளி, வெங்காயம் தொடங்கி பல்வேறு பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறையும் அபாயம் இருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலும், இந்திய பங்குச்சந்தையில் முதலீடுகளை வெளியேற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இந்த பொருளாதாரச் சிக்கல்களையும் இந்திய சந்திக்கவிருப்பதாக அந்திய முதலீட்டாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.