இந்திய பங்குச்சந்தையில் ஒரே காலாண்டில் ரூ.12.6 லட்சம் கோடி காலி: சரிவில் இருந்து காப்பாற்றிய நடுத்தர மக்களின் எஸ்ஐபி முதலீடு!
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், 2026 மார்ச் காலாண்டில் இந்திய குடும்பங்களின் பங்குச் சந்தை சொத்து மதிப்பில் ரூ.12.6 லட்சம் கோடி துடைத்தெறியப்பட்டுள்ளது. என்எஸ்இ அமைப்பின் சமீபத்திய மார்க்கெட் பல்ஸ் அறிக்கையின்படி, சமீப காலங்களில் இந்திய முதலீட்டாளர்கள் சந்தித்த மிக மோசமான சரிவுகளில் ஒன்றாக இந்த காலாண்டு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இத்தகைய கடுமையான சரிவுக்கு மத்தியிலும், உள்நாட்டு முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையை முற்றிலும் முடங்கிவிடாமல் தடுத்து நிறுத்தும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி உறிஞ்சியாக (Shock absorber) தற்பொழுது மாறியுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம்
இந்திய நிறுவனங்களில் இருந்து 17 ஆண்டுகால குறைந்தபட்ச அளவிற்கு வெளியேறிய வெளிநாட்டு முதலீடுகள்
கடந்த 2026 நிதியாண்டில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து மிக அதிவேகமாகத் தங்களது நிதியைத் திரும்பப் பெற்று வெளியேறியுள்ளனர். இக்காலகட்டத்தில் சுமார் 19.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியதால், என்எஸ்இ நிறுவனங்களில் அவர்களின் பங்கு 15.8% ஆக, அதாவது 17 ஆண்டுகால குறைந்தபட்ச அளவிற்கு வீழ்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய மாபெரும் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் நடந்திருந்தால் இந்தியச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும், ஆனால் இந்த முறை இந்தியச் சேமிப்பாளர்கள் சந்தையைத் தாங்கிப் பிடித்துள்ளனர்.
உள்நாட்டு முதலீடுகளின் சாதனை
இந்திய சந்தையை ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடித்த நடுத்தர மக்களின் மாதாந்திர எஸ்ஐபி முதலீடுகள்
தற்பொழுது பரஸ்பர நிதிகள் (Mutual Funds), காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களின் (DIIs) பங்கு என்எஸ்இ சந்தையில் 19.6% ஆக உயர்ந்து, தொடர்ந்து 6 காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகளை விட அதிகமாக நீடிக்கிறது. நடுத்தர மக்கள் தங்களது எதிர்காலத்திற்காகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் மாதாந்திர எஸ்ஐபி (SIP) தொகை 2026 நிதியாண்டில் சராசரியாக 29,000 கோடி முதல் 31,000 கோடி ரூபாய் வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுச் சென்ற பங்குகளை விட ஐந்து மடங்கு அதிகமான தொகையை உள்நாட்டு நிறுவனங்கள் உள்வாங்கியதால், மிடில் கிளாஸ் மக்களின் எஸ்ஐபி முதலீடு சந்தை வீழ்வதைத் தடுக்கும் முதன்மைச் சக்தியாக மாறியுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள் நிலை
சந்தையின் தற்போதைய ஒட்டுமொத்த குடும்பச் சொத்து மதிப்பு மற்றும் இதில் அடங்கியுள்ள உள்நாட்டு அபாயங்கள்
சந்தையின் இந்த கடுமையான சரிவின் போது சில்லறை முதலீட்டாளர்களின் (Retail Investors) நேரடிப் பங்குரிமை 9.1% என்கிற 5 ஆண்டுகால குறைந்தபட்ச அளவிற்குச் சரிந்துள்ளது. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்ட் வழியிலான முதலீடுகளையும் சேர்த்துக் கணக்கிடும் போது, இந்தியக் குடும்பங்கள் ஒட்டுமொத்த சந்தையின் 18.7 சதவீதத்தைக் கட்டுப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை விட அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சமீபத்திய சரிவிற்குப் பிறகும் இந்தியக் குடும்பங்களின் ஒட்டுமொத்த ஈக்விட்டி சொத்து மதிப்பு ரூ.76.5 லட்சம் கோடியாக நீடித்தாலும், அடுத்தடுத்த சந்தை வீழ்ச்சிகளின் போது இந்த நடுத்தர வர்க்கத்தினரே அதிகப் பாதிப்பைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.