இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ர கருத்தைக் கூறியிருந்தார். உலகில் முன்னேறிய நாடுகளுடன் போட்டியிட, இந்தியாவின் உற்பத்தியைப் பெருக்க இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். நாராயணமூர்த்தியின் இந்த கருத்தை இந்தியாவின் பல்வேறு முன்னணி தொழிலதிபர்களும், ஸ்டார்ட்அப் சிஇஓக்களும் வரவேற்ற நிலையில், உழைக்கும் வர்க்கத்தினரிடையே இந்தக் கருத்து நன்மதிப்பைப் பெறவில்லை. இப்போதும் கிட்டத்தட்ட ஊதியமில்லாமல் அத்தனை மணி நேரமே உழைத்து வருவதாகவும், பெரு நிறுவனங்கள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவதாகவும் கூறி பலரும் நாராயணமூர்த்தியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அமெரிக்கா-இந்திய தொழிலதிபர் வினோத் கோஷ்லாவின் கருத்து:
இந்த பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரும், முதலீட்டாளருமான வினோத் கோஷ்லாவிடம் எக்ஸ் பதிவர் ஒருவர் நாராயணமூர்த்தியின் கருத்து தொடர்பாக அவரது கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கோஷ்லா, நாராயணமூர்த்தியின் கருத்து தங்களைத் தாக்குவதைப் போல இருப்பதாக உணர்பவர்களுக்கு மனநல சிகிச்சை தான் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய விரும்பவில்லை என்றால் செய்யாதீர்கள். அதற்கான பின்விளைவுகளை நீங்கள் தான் ஏற்கப் போகிறீர்கள். அவர் (நாராயணமூர்த்தி) லட்சியம் கொண்ட இளைஞர்களுக்காக கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், வாழ்க்கையை வேறு விதமாகவும் அமைத்துக் கொள்ளலாம்" எனப் பதிவிட்டிருக்கிறார் அவர்.