இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 9.68 சதவீதமாக உயர்வு: எரிபொருள் பணவீக்கம் 30% எகிறியதால் அதிர்ச்சி!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அண்மையில் நிலவி வந்த கடுமையான போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி தடங்கல் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் தற்பொழுது கடுமையான பணவீக்க அழுத்தத்தை சந்தித்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மே மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கமானது (WPI) கடந்த ஏப்ரல் மாதத்தின் 8.30 சதவீதத்தில் இருந்து தற்பொழுது 9.68 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்து இரட்டை இலக்கத்தை நெருங்கியுள்ளது. இது ராய்ட்டர்ஸ் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த 9.05 சதவீதத்தை விட மிகவும் அதிகமாகும்.
30 சதவீதம்
30 சதவீதத்தைத் தாண்டிய எரிபொருள் பணவீக்கம்
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு மிக முக்கியக் காரணம் எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுதான். இப்பிரிவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 24.89 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் அது 30.33 சதவீதமாக எகிறியுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் பிரிவின் பணவீக்கம் மிக அதிகமாக 61.51 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. மே மாதத்தில் எரிபொருள் விலையை நான்கு முறை அதிரடியாக உயர்த்தியதால், நாட்டின் ஒட்டுமொத்தப் போக்குவரத்து மற்றும் தளவாடச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
உற்பத்திச் செலவுகள்
தொழிற்சாலை உற்பத்திச் செலவுகள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு
எரிசக்தி விலையேற்றம் நேரடியாகத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவுகளை அதிகரிக்க செய்துள்ளதால், டபிள்யூபிஐ குறியீட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் 6.68 சதவீதத்தில் இருந்து 7.48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் அடிப்படை உலோகங்கள் 12.3 சதவீதமும், இரசாயனப் பொருட்கள் 13.4 சதவீதமும், ஜவுளி உற்பத்தி 10.22 சதவீத பணவீக்கத்தையும் பதிவு செய்துள்ளன. இதேபோல், சில்லறைச் சந்தையில் காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளதால், உணவுப் பணவீக்கம் 3.11 சதவீதத்தில் இருந்து 4.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் பணவீக்கக் கணிப்பு உயர்வு மற்றும் சில்லறை சந்தை பாதிப்பு
மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ள இதே வேளையில், மே மாதத்திற்கான நுகர்வோர் விலை அடிப்படையிலான சில்லறை பணவீக்கமும் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்கள் மட்டத்தில் ஏற்படும் இந்தத் தொடர் விலை உயர்வு, காலப்போக்கில் சில்லறைச் சந்தையில் வ்ட்டியில் விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நடப்பு நிதியாண்டிற்கான தனது சில்லறைப் பணவீக்கக் கணிப்பை முந்தைய 4.6 சதவீதத்தில் இருந்து தற்பொழுது 5.1 சதவீதமாக அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.
புதிய அடிப்படை ஆண்டு
புதிய 2022-23 அடிப்படை ஆண்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
இந்தியாவின் பணவீக்கத்தைக் கணக்கிடும் முறையில் மத்திய அரசு தற்பொழுது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. குறியீட்டில் உள்ள ஒட்டுமொத்தப் பொருட்களின் எண்ணிக்கை 697ல் இருந்து 957 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நவீன இந்தியாவின் ஆற்றல் பயன்பாட்டிற்கு ஏற்ப, சூரிய ஒளி, காற்று மற்றும் அணுமின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை முதன்மைப் பொருட்கள் பிரிவில் இருந்து மாற்றப்பட்டு, எரிபொருள் பிரிவின் கீழ் முழுமையாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்பொழுது அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த மாதங்களில் இப்பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.