LOADING...
அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா -அமெரிக்கா வர்த்தக டீலில் சிக்கல்: தற்காலிகமாக ரத்து?
நீதிமன்ற தீர்ப்பால் இந்தியா -அமெரிக்கா வர்த்தக டீல் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது

அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா -அமெரிக்கா வர்த்தக டீலில் சிக்கல்: தற்காலிகமாக ரத்து?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
08:49 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மார்ச் மாதம் கையெழுத்தாகவிருந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (Interim Trade Deal) தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக வர்த்தக வரிகளை விதித்தது செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததே இந்த இழுபறிக்கு முக்கியக் காரணமாகும். இந்த ஒப்பந்தத்தின் சட்டபூர்வ ஆவணங்களை இறுதி செய்ய, இந்தியத் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் தர்ப்பன் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்பு முறையில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த பயணம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தற்போதைய சூழலை ஆய்வு செய்த பிறகே புதிய தேதியில் சந்திக்க முடிவு செய்துள்ளன.

குழப்பம்

குழப்பத்தில் அமெரிக்க அரசு

அதிபர் டிரம்ப் அவசரக்கால அதிகாரத்தை பயன்படுத்தி விதித்த வரிகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், தற்போது பிரிவு 122-இன் கீழ் 15% வரி மட்டுமே விதிக்க அமெரிக்காவிற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் பிரிவு 338-ஐ பயன்படுத்தி மீண்டும் 50% வரை வரி விதிக்க வழி தேடி வருகிறது. இந்தச் சட்ட மாற்றங்களால் வர்த்தகக் கொள்கையில் நிலையற்ற தன்மை நிலவுவதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நிலைப்பாடு

இந்தியாவுக்கு சாதகமா?

தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பொருட்கள் மீதான வரி 15%-ஆகக் குறைந்துள்ளது. இது ஏற்கனவே ஒப்பந்தத்தில் பேசப்பட்ட 18%-ஐ விடக் குறைவு என்பதால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் பிடி தளர்ந்துள்ளதால், இந்தியா அதிக சலுகைகளை கேட்டுப் பெற இது ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க வரிகள் 50%, 25%, 10%, 15% எனத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மார்ச் மாதம் இந்தியா வருவதாக இருந்த திட்டமும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement