Loading...
உள்நாட்டுத் தேவையால் இந்தியச் சேவைத் துறை அசுர வளர்ச்சி: அக்டோபர் மாத PMI குறியீடு உயர்வு
உள்நாட்டுத் தேவையால் இந்தியச் சேவைத் துறை அசுர வளர்ச்சி

உள்நாட்டுத் தேவையால் இந்தியச் சேவைத் துறை அசுர வளர்ச்சி: அக்டோபர் மாத PMI குறியீடு உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமாக இருக்கும் சேவைத் துறை, உள்நாட்டு நுகர்வு மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் வரத்து காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் 4 மாதங்களில் இல்லாத அளவிலான வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. HSBC மற்றும் S&P Global இணைந்து வெளியிட்ட கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டின் (PMI) படி, சேவைத் துறை குறியீடு செப்டம்பரில் 55.2 ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 55.8 ஆக உயர்ந்துள்ளது. 50-க்கு மேல் இருக்கும் PMI குறியீடு வளர்ச்சி பாதையைக் குறிப்பதாகும்.

ஏற்றுமதி

உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு & ஏற்றுமதியில் மந்தநிலை

கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய வர்த்தக ஆர்டர்கள் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

புதிய வாடிக்கையாளர்கள் இணைப்பு மற்றும் விளம்பர உத்திகள் இவ்வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

உள்நாட்டுத் தேவை வலுவாக இருந்தபோதிலும், சர்வதேசச் சந்தைகளிலிருந்து கிடைத்த புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த 45 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் மெதுவான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன.

சேவைத் துறையில் புதிய பணியாளர்கள் சேர்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு மிக மெதுவான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பதிவு செய்துள்ளது.

பணவீக்க அழுத்தம்

பணவீக்க அழுத்தம் குறைவு & உற்பத்திச் செலவு

சேவைத் துறை நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவுச் சுமை குறைந்துள்ளது தொழில் நிறுவனங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

நுகர்வோருக்கு விதிக்கப்படும் சேவை விலைகளின் உயர்வு 4 மாதங்களில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத அளவுக்கு உற்பத்திச் செலவு சார்ந்த பணவீக்கம் குறைந்துள்ளது.

இருப்பினும், மின்சாரம், தொழிலாளர்களின் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் தொடர்ந்து உயர்வாகவே இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

எதிர்கால வளர்ச்சி

எதிர்கால வளர்ச்சி குறித்த நம்பிக்கையும் எச்சரிக்கையும்

HSBC நிறுவனத்தின் தலைமை இந்தியப் பொருளாதார நிபுணர் பிராஞ்சல் பண்டாரி தெரிவிக்கையில், சேவைத் துறை நிறுவனங்கள் வரும் 12 மாத கால வணிக வளர்ச்சி குறித்து நம்பிக்கை கொண்டிருந்தாலும், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் தொழில்முனைவோரின் நம்பிக்கைக் குறியீடு சற்றுச் சரிவைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் கூட்டுக் உற்பத்தி மற்றும் சேவைத் துறை குறியீடு செப்டம்பர் மாதத்தின் 55.9-லிருந்து அக்டோபரில் 56.2 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT