Page Loader
Rediff நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது இன்ஃபிபீம் அவென்யூஸ்
Rediff நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது இன்ஃபிபீம் அவென்யூஸ்

Rediff நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது இன்ஃபிபீம் அவென்யூஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2024
08:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபிபீம் அவென்யூஸ், Rediff.com இல் 54% பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது. $3 மில்லியன் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம், 28 வருட பழமையான இணைய சேவை நிறுவனத்தில் நடக்கும் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. முன்னதாக, Rediff.com 1996இல் ஐஐஎம் கொல்கத்தா முன்னாள் மாணவரான அஜித் பாலகிருஷ்ணனால் நிறுவப்பட்டது. அப்போது அசுர வளர்ச்சி கண்ட Rediff.com, 2000இல் அமெரிக்காவின் NASDAQ'இல் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய இணைய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. அதன் உச்சத்தில், இது NASDAQ பங்குச் சந்தையில் $600 மில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டது. இருப்பினும், 2000கள் மற்றும் 2010களில் வேகமாக மாறிய டிஜிட்டல் சூறாவளியில் சிக்கி சவால்களை எதிர்கொண்டது.

எதிர்கால உத்தி

இன்ஃபிபீம் அவென்யூஸ் கையகப்படுத்தலுக்கு பிந்தைய திட்டங்கள்

தனது போட்டியாளர்களிடம் இருந்து தொடர்ந்து சவால்களை சந்தித்த Rediff.com, அதன் சேவைகளை பன்முகப்படுத்துவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், விரைவாக பின்தங்கி NASDAQ இலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றியுள்ள இன்ஃபிபீம் அவென்யூஸ் படி, Rediff.com அதன் சவால்கள் இருந்தபோதிலும், ஒவ்வொரு மாதமும் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது. இதனால், கடன்கள், காப்பீடு மற்றும் முதலீட்டு ஆலோசனை போன்ற தயாரிப்புகளை தளத்தில் சேர்ப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த கையகப்படுத்துதலின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்ஃபிபீம் அவென்யூஸ் பங்குகள் பங்குச் சந்தையில் 8.4% உயர்ந்து வெள்ளியன்று ₹33.6ஐ எட்டியது.