இந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்?
இந்தியாவின் பூண்டு ஏற்றுமதியானது திடீரென பெரும் உயர்வைச் சந்தித்திருக்கிறது. உலகளவில் பூண்டுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளும், பூண்டு இறக்குமதிக்கு இந்தியாவை அணுகியிருக்கின்றன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பூண்டின் அளவு 110% அதிகரித்திருக்கிறது. மேலும், இந்தியாவிலிருந்து அதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பூண்டின் மதிப்பு 129% வரை அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் பூண்டு ஏற்றுமதி அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்த சீசனுக்கான பூண்டு உற்பத்தியை 30% அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும், காலநிலை மற்றும் சூழ்நிலையைப் பொருத்தே பூண்டின் உற்பத்தி அளவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் உயர்ந்தது இந்தியா பூண்டு ஏற்றுமதி?
உலகளவில் பல்வேறு நாடுகளுக்கும் பூண்டை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாக விளங்கி வருகிறது சீனா. உலகில் 75% பூண்டு ஏற்றுமதி சீனாவிலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு பல்வேறு காரணங்களால் சீனாவின் பூண்டு உற்பத்தி குறைந்ததையடுத்து, உலகளவில் பூண்டுக்கான தட்டுப்பாடு சிறிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் சீனாவிடமிருந்தே பூண்டை இறக்குமதி செய்யும் பிரேசில் மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த முறை இந்தியாவிடமிருந்து பூண்டை இறக்குமதி செய்ய முன்வந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பூண்டின் விலையும் சற்று உயர்ந்திருக்கிறது. இந்தாண்டு சீனாவின் பூண்டு உற்பத்தி குறைந்ததற்கு, கடந்தாண்டு அந்நாட்டின் பூண்டு நடவு 15 முதல் 20% வரை குறைந்ததே காரணமாகக் கூறப்படுகிறது.