புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.588 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, செப்டம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து ஆறாவது வாரமாக புதிய உச்சம் தொட்டுள்ளதோடு, முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் கூர்மையான அதிகரிப்பு, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு எதிராக இந்தியாவின் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் நிலையற்ற சர்வதேச சந்தைகளை எதிர்கொள்ளும் போது அதன் நாணயத்திற்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.
சர்வதேச நாணய நிதி கையிருப்பு குறைவு
முந்தைய அறிக்கை வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பு 2.838 பில்லியன் டாலர் அதிகரித்து 692.296 பில்லியன் டாலராக இருந்தது. தற்போதைய 12.588 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எப்போதும் இல்லாத வாராந்திர உயர்வுகளில் ஒன்றாக உள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 10.468 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 616.154 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. வாரத்தில் தங்கம் கையிருப்பு 2.184 பில்லியன் டாலர் அதிகரித்து 65.796 பில்லியன் டாலராக உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியம் உடனான இந்தியாவின் இருப்பு நிலை அறிக்கை வாரத்தில் 71 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 4.387 பில்லியன் டாலராக உள்ளது.