வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்க கையிருப்பு 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்தது
இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) அதிக அளவிலான தங்கத்தை மீண்டும் உள்நாட்டு பெட்டகங்களுக்கு மாற்றியதனால், இந்தியாவின் வெளிநாட்டு தங்க இருப்பு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த தங்க கையிருப்பில் 47% மட்டுமே வெளிநாடுகளில் உள்ளது. டிசம்பர் 2017 இல் ஆர்பிஐ தங்கத்தைக் குவிக்கத் தொடங்கியதிலிருந்து வெளிநாடுகளில் இருக்கும் மிகக் குறைந்த அளவாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பிறகு, மார்ச் 2022 இல், ரஷ்ய வெளிநாட்டு நாணய சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது. அதன் பிறகு தான் வெளிநாடுகளில் இருந்த தங்கத்தை இந்தியா மீண்டும் உள்நாட்டு பெட்டகங்களுக்கு மாற்ற தொடங்கியது.
இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கம் இந்தியாவிற்கு மாற்றம்
மே 2024 இல், ரிசர்வ் வங்கி இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவிற்கு மாற்றியது. 1991ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய செய்த மிகப்பெரிய நகர்வுகளில் இதுவும் ஒன்றாகும். கூற்றுப்படி, போதுமான உள்நாட்டு சேமிப்புத் திறனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கத்தை சேமிக்க உள்நாட்டில் போதுமான சேமிப்புத் திறன் இருப்பதால் தங்கம் மாற்றப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க, 1991 ஆம் ஆண்டில் இந்தியா தனது தங்க இருப்புக்களில் ஒரு பகுதியை அடகு வைத்தது. அதற்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்.