புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு
தற்போதைய பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், உள்நாட்டில் விலையை நிலைப்படுத்தவும், சரக்குகளை அதிகரிக்கவும், புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரியை இந்தியா அமல்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல், புழுங்கல் அரிசியின் விலை இந்தியாவில் 19% மற்றும் சர்வதேச அளவில் 26% உயர்ந்துள்ளது. பாஸ்மதி அல்லாத உடைந்த அரிசி மற்றும் வெள்ளை அரிசி மீதான சமீபத்திய ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி வரி அதிகரிப்பால், இந்திய புழுங்கல் அரிசியின் விலை சர்வதேச சந்தையில் உயரும் என்பதால், ஏற்றுமதி குறைந்து உள்நாட்டு புழக்கம் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.
இந்திய புழுங்கல் அரிசிக்கு உலகளவில் தேவை அதிகரிப்பு
முன்னதாக, பாஸ்மதி அல்லாத உடைந்த அரிசி மற்றும் வெள்ளை அரிசி மீதான மத்திய அரசின் ஏற்றுமதித் தடையால் உலகளவில் அரிசி விலை 15-25% வரை உயர்ந்தது. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் உள்நாட்டு நுகர்வுத் தேவைகளுக்காக இந்திய புழுங்கல் அரிசிக்கு மாற ஆரம்பித்தனர். இதன் விளைவாக, இந்தியாவின் புழுங்கல் அரிசி ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டில் 2.58 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் தற்போதுவரை தோராயமாக 3.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் புழுங்கல் அரிசி ஏற்றுமதியின் அதிகரிப்பு, உள்நாட்டில் சிக்கலை அதிகரிக்கும் என்பதால் வரியை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.