Loading...
புதிய உச்சம்! இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை

புதிய உச்சம்! இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
07:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 8 வது வாரமாக உயர்ந்து 729.33 பில்லியன் டாலர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 8 வாரங்களில் மட்டும் சுமார் 63 பில்லியன் டாலர்கள் கையிருப்பில் கூடுதலாக சேர்ந்துள்ளன. ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மட்டும் கையிருப்பு 12.4 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் திட்டம்

ரிசர்வ் வங்கியின் அதிரடித் திட்டங்களும் எப்ஆர்ஐ வைப்புகளும்

அந்நியச் செலாவணியை ஈர்ப்பதற்காகக் கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சிறப்பு சலுகைகளே இந்த மெகா உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகளுக்கான இலவச ஹெட்ஜிங் வசதி மூலம் ஜூன் 5 முதல் ஆகஸ்ட் 21 வரை சுமார் 73 பில்லியன் டாலர் பெறப்பட்டுள்ளது.

இதில் என்ஆர்ஐ வைப்புத்தொகைகள் மூலமாக மட்டுமே 65 பில்லியன் டாலர் நாட்டிற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம்

அந்நியச் செலாவணி சொத்துகள் மற்றும் தங்கம் உயர்வு

கையிருப்பு உயர்வுக்கு அந்நியச் செலாவணி சொத்துகளின் (FCA) மதிப்பு 9.5 பில்லியன் டாலர் அதிகரித்து 591.33 பில்லியன் டாலராக உயர்ந்தது மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு மதிப்பு 2.8 பில்லியன் டாலர் உயர்ந்து 114.22 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைதல் உரிமைகள் (SDR) 18.85 பில்லியன் டாலராகவும், அதன் மீதான இருப்பு 4.93 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக பலமான பாதுகாப்பை வழங்குகிறது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும் போதோ அல்லது வெளி மூலதனங்கள் வெளியேறும் போதோ இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை சீரமைக்க ரிசர்வ் வங்கிக்கு இது அதிக அதிகாரத்தையும் கூடுதல் பலத்தையும் அளிக்கும்.

உலகளாவிய நிதி அதிர்ச்சிகளிலிருந்து இந்திய ரூபாயைப் பாதுகாக்கவும், அதன் ஸ்திரத்தன்மையைத் தக்கவைக்கவும் இந்த கையிருப்பு உதவும்.

ADVERTISEMENT