உலக நன்மைக்காகவே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது இந்தியா; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கருத்து
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு, உலகளாவிய எண்ணெய் விலையில் சாத்தியமான அதிகரிப்பைத் தடுக்கிறது என்று கூறினார். அபுதாபியில் நடந்த ADIPEC நிகழ்வில் சிஎன்என் ஊடகத்தின் பெக்கி ஆண்டர்சனிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை என்றால், உலகளாவிய விலை பீப்பாய்க்கு $200 ஆக உயர்ந்திருக்கும் என்றார். பல ஆண்டுகளாக உலகின் எரிசக்தி விநியோகத்தில் எண்ணெய் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்த ஹர்தீப் சிங் பூரி, 2026 ஆம் ஆண்டு விலை நிலையாகி குறைய வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினார். அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா சுமார் 10% குறைத்ததற்கு போட்டி சந்தை விகிதங்கள் காரணம் என்று அவர் கூறினார். சந்தையில் ஆரோக்கியமான போட்டியை எடுத்துக்காட்டி, "அதே போட்டி விகிதத்தில் சப்ளை செய்ய விரும்பும் மற்றவர்களும் உள்ளனர்." என்று அவர் கூறினார். ஒரு முக்கியமான நேரத்தில் இந்தியா தனது 5 மில்லியன் பீப்பாய்களை ரஷ்யாவிலிருந்து வளைகுடா சப்ளையர்களுக்கு மாற்றியிருந்தால், விலைகள் எகிறியிருக்கலாம் என்றார். பசுமை ஹைட்ரஜன் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் தேவையை மாற்றும் என்றும் பூரி கூறினார்.