எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் 'பிளான் பி': LPG சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடா?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் இணைந்து அவசரகாலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்தும், இயற்கை எரிவாயு விலை 40% க்கும் அதிகமாக அதிகரித்தும் உள்ள நிலையில், இந்திய அரசு பல்வேறு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறது. உள்நாட்டுத் தேவையை முன்னிலைப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகளை சார்ந்திருக்காமல் ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாற்று திட்டம்
கையிருப்பு மற்றும் விநியோகம்
இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தேவையில் 90% வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், இதுவே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், இந்தியாவிடம் 12 முதல் 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது. நிலைமை சீரடைய தவறினால், மாற்று எரிபொருள் வசதி உள்ளவர்களுக்கு LPG சிலிண்டர் விநியோகத்தில் ரேஷன் முறையை கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. தற்காலிகமாக எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது; எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.