ஆகஸ்ட் மாதத்திற்கான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.65% ஆக உயர்வு
வியாழன் (செப்டம்பர் 12) அன்று வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தரவுகளின்படி, ஆகஸ்ட் 2024இல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3.65% ஆக இருந்தது. ஒருங்கிணைந்த பணவீக்கம் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறம்) ஆகஸ்ட் 2023இல் 6.83% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 2024 இல் 3.65% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், முந்தைய ஜூலை 2024 (3.54%) உடன் ஒப்பிடும்போது உடன் ஒப்பிடும் போது 110 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 4% பணவீக்க இலக்கை விட ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் குறைந்தது ஐந்து ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். கடைசியாக ஜூலை 2024இல் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் பணவீக்க கொள்கை
ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கு 4% ஆகும். அதெல்லாம் +/- 2 சதவீத புள்ளிகளின் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். அதாவது பணவீக்கம் 2% முதல் 6% வரம்பிற்குள் இருக்க வேண்டும். தரவுகளின்படி, ஆகஸ்ட் 2023இல் 6.59% ஆக இருந்த நகர்ப்புற பணவீக்கம் ஆகஸ்ட் 2024இல் 3.14% ஆக குறைந்தது. ஆகஸ்ட் 2023 இல் 7.02% ஆக இருந்த கிராமப்புற பணவீக்கம் ஆகஸ்ட் 2024இல் 4.16% ஆக குறைந்தது. இதற்கிடையே உணவு மற்றும் பானங்களின் பணவீக்கம ஆகஸ்ட் மாதத்தில் 5.3% ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஜூலை மாதத்தில் 5.06% ஆக இருந்தது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலைக்கான பணவீக்கம் முந்தைய ஜூலை மாதத்தின் 6.8% உடன் ஒப்பிடும்போது ஆகஸ்டில் 10.7% ஆக அதிகரித்துள்ளது.