LOADING...
உங்க சிபில் ஸ்கோர் உங்களுக்கே புரியலையா? ஆதார், யுபிஐ போல உள்நாட்டு கிரெடிட் சிஸ்டம் வருமா?
ஆதார் மற்றும் யுபிஐயைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுயசார்பு கிரெடிட் ஸ்கோரின் தேவை

உங்க சிபில் ஸ்கோர் உங்களுக்கே புரியலையா? ஆதார், யுபிஐ போல உள்நாட்டு கிரெடிட் சிஸ்டம் வருமா?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா ஏற்கனவே ஆதார் மூலம் அடையாளத்தையும், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனையையும் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளாக மாற்றியுள்ளது. ஆனால், ஒரு நபர் கடன் பெறத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும் கிரெடிட் ஸ்கோர் முறை இன்னும் பலருக்குப் புரியாத புதிராகவே உள்ளது. தற்போது இந்தியாவில் டிரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், ஈக்விஃபாக்ஸ் மற்றும் சிஆர்ஐஎஃப் ஹை மார்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோரைத் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) முறைப்படுத்தப்பட்டாலும், இதில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதாக தொடர்ந்து பலராலும் கூறப்பட்டு வருகிறது.

சவால்கள்

யஷ் சந்தித்த சவால்கள்: ஒரு பாடம்

இந்தியா டுடே அறிக்கையின்படி, புனேவைச் சேர்ந்த 30 வயது பொறியாளர் யஷ், கார் லோன் வாங்கச் சென்றபோதுதான் தனது பழைய கல்லூரிக் காலத் தவறுகள் இப்போதும் துரத்துவதைக் கண்டறிந்தார். சில இஎம்ஐகளைத் தாமதமாகச் செலுத்தியது, பல ஆண்டுகள் கழித்து இப்போது அவரது லோன் விண்ணப்பத்தைப் பாதித்துள்ளது. "ஒரு தவறு எவ்வளவு காலம் எனது கிரெடிட் வரலாற்றில் இருக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை" என்கிறார் யஷ். மேலும், ஒரு நிறுவனத்தில் அவரது ஸ்கோர் 770 ஆகவும், மற்றொன்றில் 550 ஆகவும் இருந்தது அவரை மேலும் குழப்பமடையச் செய்தது. ஒரே நபருக்கு வெவ்வேறு ஸ்கோர்கள் இருப்பது இந்த அமைப்பில் உள்ள ஒருங்கிணைப்பு இல்லாமையைச் சுட்டிக்காட்டுகிறது.

சிக்கல்கள்

தற்போதைய அமைப்பில் உள்ள சிக்கல்கள்

விளக்கமின்மை: ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்ற சூத்திரம் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. பிழைகளைத் திருத்துவதில் சிக்கல்: லோன் கணக்குகள் சரியாக மூடப்பட்டாலும், அது கிரெடிட் ரிப்போர்ட்டில் அப்டேட் ஆக மாதக்கணக்கில் ஆகிறது. அதனைச் சரிசெய்ய யாரைத் தொடர்புகொள்வது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. புதியவர்களுக்கான தடையரண்: யஷ்ஷின் மனைவி போல இதுவரை கடன் வாங்காதவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இருக்காது. இதனால் அவர்களுக்கு முதல்முறை கடன் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. தரவு உரிமை: ஒருவரின் நிதித் தகவல்கள் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட, அரசின் பொதுக் கட்டமைப்பில் இருப்பது பாதுகாப்பானது எனப் பலரும் கருதுகின்றனர்.

Advertisement

கிரெடிட் ஸ்கோர்

ஆத்மநிர்பர் கிரெடிட் ஸ்கோர் ஏன் தேவை?

இந்தியா தனது சொந்த கிரெடிட் ஸ்கோர் கட்டமைப்பை உருவாக்கினால், அது யுபிஐ போல வெளிப்படையானதாகவும், சாமானிய மக்களும் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கும். இது வெறும் வங்கிப் பரிவர்த்தனைகளை மட்டும் நம்பியிருக்காமல், ஒருவரின் மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை, செல்போன் ரீசார்ஜ் பழக்கம் போன்ற மாற்றுத் தரவுகளை வைத்து ஸ்கோரைத் தீர்மானிக்க உதவும். இதன் மூலம் கடன் வரலாறு இல்லாத கோடிக்கணக்கான இந்தியர்களும் நிதிச் சேவைக்குள் வர முடியும். "இந்தியாவின் டிஜிட்டல் லட்சியங்களுக்கு ஏற்றவாறு ஒரு உள்நாட்டு கிரெடிட் சிஸ்டம் அமைப்பதே காலத்தின் கட்டாயம்" என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement