இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஆடவர் பிரிவில் சரிவு; மகளிர் பிரிவில் அதிகரிப்பு
இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் 6.7 சதவீதத்தில் இருந்து நிதியாண்டு 2024-25இன் முதல் காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, முந்தைய ஆண்டு வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்தபோது வேலையின்மை விகிதம் மாறாமல் இருந்தது. இதற்கிடையே, ஆடவர் வேலையின்மை முந்தைய காலாண்டில் 6.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024-25இன் முதல் காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், மகளிர் வேலையின்மை இந்த காலகட்டத்தில் முந்தைய மூன்று காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வழக்கமான வேலைகளில் அதிகமான ஊழியர்கள்
பொருளாதாரத்திற்கான நல்ல விஷயங்களில் ஒன்று, வழக்கமான ஊதியம் அல்லது சம்பள வேலைகளில் பங்கேற்பதில் அதிகரிப்பு ஆகும். இது அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. வழக்கமான ஊதியம்/சம்பளப் பணியில் அமர்த்தப்பட்டவர்களின் விகிதம் 2024-25இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த மூன்று காலாண்டுகளை விட அதிகமாகும். வழக்கமான சம்பளப் பணியில் ஈடுபடும் ஆண்களின் விகிதம் 47.5 சதவீதத்திலிருந்து 47.4 சதவீதமாகக் குறைந்தாலும், மகளிர் விகிதம் 1.7 சதவீத புள்ளிகள் அதிகரித்து 54 சதவீதமாக உள்ளது. கடந்த நான்கு காலாண்டுகளை விட இப்போது குறைவான பெண்களே சுயதொழில் செய்கிறார்கள்.