LOADING...
பயன்படுத்தாத கிரெடிட் கார்டை மூடுவதால் சிபில் ஸ்கோர் குறையுமா? பலரும் அறியாத 2 அதிர்ச்சி காரணங்கள்
பயன்படுத்தாத கிரெடிட் கார்டை மூடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பயன்படுத்தாத கிரெடிட் கார்டை மூடுவதால் சிபில் ஸ்கோர் குறையுமா? பலரும் அறியாத 2 அதிர்ச்சி காரணங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
May 24, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

நீங்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாத ஒரு கிரெடிட் கார்டிற்கு வருடாந்திர கட்டணம் விதிக்கப்படும் போது, அதை உடனடியாக மூடிவிட முடிவு செய்கிறீர்கள். ஆனால், எந்தவொரு இஎம்ஐ அல்லது கடன் நிலுவையும் இல்லாத போதும், இந்த ஒரு கார்டு குளோசிங் நடவடிக்கையால் உங்களின் சிபில் ஸ்கோர் 40 புள்ளிகள் வரை குறையக்கூடும். வாடிக்கையாளர்கள் தங்களின் நிதி மேலாண்மையில் செய்யும் இந்த மிக முக்கியமான தவறு, எதிர்காலத்தில் அவர்கள் புதிய கடன்கள் பெறுவதைப் பெரிதும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#1

கிரெடிட் பயன்பாட்டு விகிதம் அதிகரித்தல்

உங்கள் வசம் உள்ள அனைத்து கார்டுகளின் மொத்த கடன் வரம்பில், நீங்கள் எவ்வளவு பணத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதே கிரெடிட் பயன்பாட்டு விகிதம் ஆகும். உதாரணமாக, உங்களிடம் உள்ள கார்டுகளின் மொத்த வரம்பு 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதில் 1 லட்சம் பயன்படுத்தினால் உங்களின் பயன்பாட்டு விகிதம் 20 சதவீதமாக இருக்கும். இப்போது 2 லட்சம் வரம்பு கொண்ட ஒரு கார்டை மூடினால், மொத்த வரம்பு 3 லட்சமாகக் குறைந்து, உங்களின் பயன்பாட்டு விகிதம் உடனடியாக 33 சதவீதமாக உயர்ந்துவிடும். கடன் பயன்பாட்டு விகிதம் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பதை, வங்கிகள் உங்களின் நிதி நெருக்கடியாகக் கருதி சிபில் ஸ்கோரைக் குறைத்துவிடும்.

#2

கணக்கின் சராசரி வயது குறைதல்

நீங்கள் நீண்ட வருடங்களாகப் பயன்படுத்தி வரும் பழைய கிரெடிட் கார்டுகள், உங்களின் பொறுப்பான திருப்பிச் செலுத்தும் வரலாற்றைக் காட்டும் முக்கிய ஆதாரங்களாகும். நீங்கள் பல வருடங்களாக வைத்துள்ள ஒரு பழைய கார்டை மூடும்போது, அது உங்களின் நடப்புக் கடன் வயதுக் கணக்கீட்டில் (Active Credit Age) பங்களிப்பதை நிறுத்திவிடுகிறது. மூடப்பட்ட கணக்குகள் சிபில் அறிக்கையில் 10 ஆண்டுகள் வரை தெரிந்தாலும், உங்களின் ஒட்டுமொத்த கடன் கணக்கின் சராசரி வயதை அது உடனடியாகக் குறைத்துவிடும்.

Advertisement

சூழ்நிலைகள்

எந்தச் சூழ்நிலைகளில் மட்டும் கிரெடிட் கார்டுகளை மூடலாம்?

ஒரு கார்டில் அதிகப்படியான வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதற்கு இணையான பலன்கள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காத பட்சத்தில் அதை மூடுவது நல்லதாகும். ஒரே மாதிரியான சலுகைகள் கொண்ட பல கார்டுகள் உங்களிடம் இருந்தால், பழைய கார்டைத் தக்கவைத்துக்கொண்டு, புதிய கார்டுகளை மட்டும் மூடலாம். உங்கள் கார்டில் தொடர்ந்து ஆன்லைன் மோசடிப் பரிவர்த்தனைகள் நடந்து, வங்கி நிர்வாகம் அதற்குச் சரியான தீர்வு தராதபோது பாதுகாப்பு கருதி கார்டை மூடலாம்.

Advertisement