IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்?
தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் குறைவாக இருந்த போது, போன் தயாரிப்பில் கோலோச்சிய பெரு நிறுவனங்களுள் ஒன்று பிளாக்பெர்ரி (BlackBerry). கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016ம் ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பிலிருந்து விலகி சைபர் பாதுகாப்பு மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாறியது. சைபர் பாதுகாப்பு மென்பொருள் மட்டுமின்ற IoT (Internet of Things) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது ப்ளாக்பெர்ரி. மேலும், 2016ம் ஆண்டே பிளாக்பெர்ரி என்ற பிராண்டின் கீழ் புதிய போன்களை உற்பத்தி உரிமையை சீன டெக் நிறுவனமான TCL-க்கு வழங்கியது அந்நிறுவனம். தற்போது தங்களுடைய வணிக நோக்கங்களை முதலீட்டாளர்களுக்கு மேலும் தெளிவுபடுத்தும் பொருட்டு புதிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது பிளாக்பெர்ரி.
புதிய மாற்றத்தைச் சந்திக்கவிருக்கும் பிளாக்பெர்ரி:
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, பிளாக்பெர்ரி நிறுவனமானது தங்களுடைய IoT வணிகத்தையும், சைபர் பாதுகாப்பு சேவை வணிகத்தையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கவிருக்கிறது. இரு வணிகளுங்களுக்கும் பிரத்தியேகமான நோக்கம் இருக்கிறது, பிரத்தியேகமான இலக்கு இருக்கிறது. எனவே, இதனை தனித்தனியாகப் பிரிப்பதன் மூலம் மேலும் சிறப்பான செயல்பாடுகளை இரு வணிகங்களிலும் மேற்கொள்ள முடியும் எனக் கருதுகிறது பிளாக்பெர்ரி. "இந்த இரு வணிகங்களைப் பிரிப்பது முதலீட்டாளர்களுக்கும் பிளாக்பெர்ரியின் வணிகள் மீதான தெளிவையும் நம்பிக்கையையும் கொடுக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார் பிளாக்பெர்ரி சிஇஐ ஜான் சென். பிளாக்பெர்ரியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வைச் சந்தித்திருக்கின்றன.
மேலும் ஒரு பங்கு அறிமுகம்:
தற்போது IoT வணிகத்தை தனியாகப் பிரித்து, அடுத்த நிதியாண்டில் அந்த நிறுவனத்தையும் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கிறது பிளாக்பெர்ரி. தற்போது பிளாக்பெர்ரியின் பங்குகள் 4% உயர்வைச் சந்தித்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வெரிடாஸ் கேபிடல் என்ற முதலீட்டு நிறுனம் பிளாக்பெர்ரியை வாங்கத் திட்டமிடுவதாக வெளியா தகவலையடுத்து 18% வரை சரிவைச் சந்தித்திருந்தது. கடந்த வாரம் தங்களுடைய இரண்டாம் காலாண்டு முடிவுகளையும் வெளியிட்டிருந்தது பிளாக்பெர்ரி. அதன்படி கடந்த நிதியாண்டை விட தற்போதைய இரண்டாம் காலாண்டில் 36 மில்லியன் டாலர்கள் குறைவாக 132 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியிருக்கிறது பிளாக்பெர்ரி. தற்போது தங்களது வணிகங்களை பிரிக்க பிளாக்பெர்ரி எடுத்திருக்கும் முடிவு எப்படியான தாக்கத்தை அந்நிறுவனத்தினி மீது ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.