
லீலாவதி மருத்துவமனை தொடர்பான நிதி மோசடியில் சிக்கிய ஹெச்டிஎஃப்சி வங்கி சிஇஓ; யார் இந்த சஷிதர் ஜகதீஷன்?
செய்தி முன்னோட்டம்
லீலாவதி மருத்துவமனையை இயக்கும் மும்பையின் லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ (LKKM) அறக்கட்டளையுடன் தொடர்புடைய நிதி மோசடி வழக்கில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஷிதர் ஜகதீஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மே 30 அன்று பிறப்பித்த உத்தரவின் பேரில், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பாந்த்ரா போலீசாருக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. ஜெகதீஷன் முன்னாள் அறங்காவலரிடமிருந்து ரூ.2.05 கோடியைப் பெற்றதாகவும், தற்போதைய அறங்காவலரின் குடும்ப உறுப்பினரைத் துன்புறுத்துவதற்காக இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறக்கட்டளை குற்றம் சாட்டுகிறது.
பின்னணி
சஷிதர் ஜகதீஷனின் பின்னணி
சஷிதர் ஜகதீஷன் 1996 முதல் ஹெச்டிஎஃப்சி வங்கியில் பணியாற்றி வருகிறார். 2008 இல் தலைமை நிதி அதிகாரியாகவும், பின்னர் 2020 இல் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். இந்திய ரிசர்வ் வங்கி 2023 இல் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்ததோடு, அவரது பதவிக்காலத்தை அக்டோபர் 2026 வரை நீட்டித்தது. அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் ஒரு பட்டய கணக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஹெச்டிஎஃப்சி வங்கி தனது அதிகாரப்பூர்வ பதிலில், குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்தோடு முன்வைத்துள்ளதாக கூறியுள்ளது. தற்போதைய அறங்காவலரான பிரசாந்த் மேத்தாவும் அவரது குடும்பத்தினரும் வங்கிக்கு கணிசமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்றும் எச்டூஎப்சி கூறியது.