WFH முறையை தேர்வு செய்தால், லீவு-ஐ இழக்க தயாராகுங்கள்: விவாதத்தை தூண்டியுள்ள HCL-இன் புதிய கொள்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCLTech, ஊழியர்களின் விடுமுறையை, அலுவலக வருகையுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களும், மாதத்தில் 12 நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று இந்த புதிய கொள்கை கட்டளையிடுகிறது.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அலுவலகத்திற்கு வராத ஒவ்வொரு நாளுக்கும் விடுப்புகளாக கருதப்படும் என அந்த புதிய கொள்கை தெரிவிக்கிறது.
ஹெச்.சி.எல் நிறுவனம், ஹைபிரிட் வேலை மாதிரியை ஏற்றுக்கொண்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
எதிர்வினை
புதிய வருகைக் கொள்கை குறித்து ஊழியர்கள் கவலை
பெயர் தெரியாத HCLTech ஊழியர் ஒருவர் Moneycontrol-இடம், நிறுவனத்தின் மனிதவளத் துறை ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் புதிய கொள்கையைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.
இந்தக் கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதோடு, ஊழியர்களின் விடுமுறைகள் தீர்ந்தவுடன் ஊதிய இழப்பு ஏற்படக்கூடும் என்ற கவலையை ஊழியர்களிடையே எழுப்பியுள்ளது.
தற்போது, மூன்று வருடங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்கள் 18 வருடாந்திர விடுப்பு மற்றும் ஒரு தனிப்பட்ட விடுப்புக்கு தகுதியுடையவர்கள்.
அதே சமயம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் சுமார் 20 வருடாந்திர விடுப்புகளையும் இரண்டு தனிப்பட்ட விடுப்புகளையும் பெறுகின்றனர்.
நிறுவனத்தின் பதில்
HCLTech ஊழியர்களின் கவலைகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் பதில்
"எங்கள் ஹைப்ரிட் வேலைக் கொள்கையானது, நடுத்தர மற்றும் மூத்த நிலை நிர்வாகத்தில் உள்ளவர்கள், அலுவலக ஏற்பாட்டிலிருந்து வாரத்தில் 3 நாட்கள் வேலைகளைப் பின்பற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது ஒத்துழைப்பை ஆதரிக்கிறது" என்று HCLTech செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"மற்ற அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான பணி ஏற்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள். இவை அந்தந்த மேலாளர்களால் திட்டமிடப்படுகின்றன."
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., சி விஜயகுமார், "வேறியபிள் காம்பென்சேஷனை அலுவலகத்திற்கு அழைத்து வருவதோடு இணைக்கும் திட்டம் இல்லை" என்று முன்பு கூறியிருந்தார்.