ஆயுள் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதலீட்டு அம்சங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டங்களுக்கு வரி விதிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முறைப்படுத்தப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "முதலீட்டுப் பகுதியுடன் கூடிய ஆயுள் காப்பீட்டுக்கு விலக்கு அளிக்கப்படாது. அதற்கு விலக்களிப்பதில் அர்த்தமில்லை. இது அடிப்படையில் ஒரு முதலீடு. வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு நாம் விலக்கு அளிக்க வேண்டும், முதலீடுகள் அல்ல." என்று அந்த அதிகாரி விதிவிலக்கின் நியாயத்தை விளக்கினார்.
வரி விலக்கால் மலிவு விலையில் ஆயுள் காப்பீடு
இந்த முடிவு குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டை மிகவும் மலிவு விலையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதை வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டில் பாலிசியின் காலப்பகுதியில் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் பயனாளிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கவரேஜ் வழங்குகிறது. பொதுவாக 10 முதல் 30 ஆண்டுகள் வரை கிடைக்கும் இவற்றுக்கு பிரீமியங்கள் பொதுவாக குறைவாக இருக்கும். ஏனெனில் இதில் எந்தவித சேமிப்பும் அல்லது முதலீட்டு அம்சமும் இல்லாமல் எதிர்பாராமல் மரணமடைந்தால் மட்டுமே நன்மையை வழங்குகிறது. இதற்கிடையே, ஜிஎஸ்டியில் இருந்து குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டிற்கு விலக்கு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.