விமான நிலையக் கட்டணங்களைக் குறைத்தது மத்திய அரசு; டிக்கெட் விலை குறையுமா?
செய்தி முன்னோட்டம்
போர்ச் சூழலால் விமான போக்குவரத்துத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக, விமான எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், விமானக் கட்டணங்கள் உயர்வதைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, உள்நாட்டு விமானங்களுக்கான தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிடம் கட்டணங்களை 25% குறைக்க உத்தரவிட்டுள்ளார். இந்தச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும். எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம், சாமானிய மக்களுக்கு விமானப் பயணம் தொடர்ந்து மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முதன்மை இலக்காகும்.
விலை உயர்வு
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அரசு கட்டுப்பாடு
புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக விமான எரிபொருள் (ATF) விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க, எரிபொருள் விலை உயர்வினால் ஏற்படும் சுமையில் 25 சதவீதத்தை மட்டுமே விமான நிறுவனங்கள் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என ஏற்கனவே அரசு வரம்பு விதித்துள்ளது. "சவாலான இந்தச் சூழலிலும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் விமான ரத்து நடவடிக்கைகள் உள்நாட்டுப் போக்குவரத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்" என்று அமைச்சர் நாயுடு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த மாற்றத்தால் அடுத்த மூன்று மாதங்களில் விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை செலவு மிச்சமாகும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். விமான நிலையங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, அடுத்த கட்டணச் சுழற்சியின் போது சரிசெய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.