மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா
இந்தியாவில் கணினி (Compputer), மடிக்கணினி (Laptop) மற்றும் கைக்கணினி (Tablet) உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. இந்தியாவில் உள்நாட்டு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களின் தயாரிப்பை ஊக்குவிக்கவும், சீனாவுடனான வர்த்தக சமமின்மையை சரிக்கட்டவுமே இந்த முடிவை எடுத்தது இந்திய அரசு. ஆனால், மின்சாதன தயாரிப்புத் துறையிடமிருந்து எதிர்ப்பு எழவே, அத்திட்டத்தை மூன்று மாத காலம் வரை தள்ளி வைத்தது இந்தியா. தற்போது அந்தத் திட்டத்தை மேலும் ஓராண்டு காலம் வரை மத்திய அரசு தள்ளி வைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா:
உரிமம் பெறும் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்கு மேற்கூறிய மின்னணு சாதனங்களை இறங்குமதி செய்ய முடியும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறையானது அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள், டெல் மற்றும் எச்பி உள்ளிட்ட பல்வேறு மடிக்கணினி மற்றும் கணினி தயாரிப்பாளர்களைப் பாதிக்கும். மத்திய அரசின் புதிய விதிமுறையானது இந்தியாவில் இயங்கி வரும் மேற்கூறிய அமெரிக்க நிறுவனங்களை எந்தளவு பாதிக்கும் என்பது குறித்து, கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரீன் தாய் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. எனவே, தற்போது உரிமம் பெற வேண்டும் என்ற திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, மின்சாதனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அது குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எளிய செயல்பாடு நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.