கூகுள் நியூஸ் இயக்குனர் மாதவ் சின்னப்பா பணி நீக்கம்
கூகுள் தனது நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய நியூஸ் எகோசிஸ்டம் டெவலப்மென்ட் இயக்குநர் மாதவ் சின்னப்பாவை பணிநீக்கம் செய்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மாதவ் சின்னப்பா பொருளாதாரத்தில் பிஏ பட்டமும், ஜகார்த்தா இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பும் முடித்துள்ளார் மற்றும் 29 வருட தொழில்முறை அனுபவம் பெற்றவர் ஆவார். ஆகஸ்ட் 2010இல் கூகுள் நியூஸின் மூலோபாய கூட்டாண்மைகளின் தலைவராக அவர் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுளுக்கு முன், அவர் பிபிசி, யுனைடெட் பிசினஸ் மீடியா மற்றும் அசோசியேட்டட் பிரஸ் டெலிவிஷன் நியூஸ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். தனது பணி நீக்கம் குறித்து லிங்க்ட்இன்னில் பதிவிட்டுள்ள மாதவ் சின்னப்பா, தற்போது தோட்ட பராமரிப்பு விடுப்பில் இருப்பதாகவும், அடுத்து செய்யவேண்டியது குறித்து முடிவெடுக்க சிறிது நேரம் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்
முன்னதாக, ஜனவரி 2023இல், கூகுள் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த அறிவிப்பை வெளியிட்டு இதற்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். ஆட்குறைப்பு குறித்து அப்போது பேசிய சுந்தர் பிச்சை, நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பெற்ற வியத்தகு வளர்ச்சியால், அளவுக்கு அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியதாகவும், அதே நேரத்தில் ஊழியர்களின் அதிகரிப்பு ஏற்ற வளர்ச்சியை நிறுவனம் பெற வேண்டிய தேவை உள்ளது என்றும் கூறினார். ஆனால் நிறுவனம் இப்போது வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர்கொள்கிறது மற்றும் அதன் பணியாளர்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.