90-ஸ் கிட்ஸ்களுக்கு இன்ப அதிர்ச்சி: 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வரும் கோல்ட் ஸ்பாட் குளிர்பானம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பாரம்பரிய ஆரஞ்சு சுவை குளிர்பானமான கோல்ட் ஸ்பாட், சுமார் 26 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கத் தயாராகியுள்ளது. குளிர்பானச் சந்தையில் அதிகரித்து வரும் கடும் போட்டி மற்றும் குறைந்த சர்க்கரை அளவு கொண்ட ஆரோக்கியமான பானங்களுக்கான நுகர்வோரின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த வாரம் முதல் குறைந்த சர்க்கரை மற்றும் சர்க்கரை இல்லாத வகைகளில் கோல்ட் ஸ்பாட் விற்பனைக்கு வரவுள்ளது.
எம்.எஸ். தோனி
விற்பனை வியூகமும் எம்.எஸ். தோனியின் வருகையும்
கோகோ கோலா நிறுவனத்தின் மற்றொரு பிரபல ஆரஞ்சு பானமான ஃபேண்டாவின் விற்பனையைப் பாதிக்காத வண்ணம், கோல்ட் ஸ்பாட் பானத்தை குறைந்த சர்க்கரை மற்றும் சர்க்கரை இல்லாத மாற்று பானமாக அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த மறுபிரவேசத்தின் வெற்றி என்பது வலுவான விநியோகக் கட்டமைப்பு, தயாரிப்புத் தரம் மற்றும் சந்தைப்படுத்தும் வியூகங்களை பொறுத்தே அமையும்.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கோல்ட் ஸ்பாட் கேன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வார இறுதியில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இருப்பினும், இந்தப் பாரம்பரிய பானத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.
வரலாற்றுப் பின்னணி
கோல்ட் ஸ்பாட் குளிர்பானத்தின் வரலாற்றுப் பின்னணி
1977-ஆம் ஆண்டு கோகோ கோலா நிறுவனம் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பார்லே மற்றும் பிஸ்லெரி நிறுவனத்தின் உரிமையாளரால் கோல்ட் ஸ்பாட் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிமுகமான குறுகிய காலத்திலேயே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பானம், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் கோடைக்கால விடுமுறைகளின் அடையாளமாக மாறியது.
1980-களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் புகழ்பெற்ற விளம்பர வாசகம் நுகர்வோர் மனதில் நீங்கா இடம்பிடித்தது.
பின்னர் 1993-ஆம் ஆண்டில், தம்ஸ் அப், லிம்கா மற்றும் மாசா ஆகிய பிராண்டுகளுடன் சேர்த்து கோல்ட் ஸ்பாட் நிறுவனத்தையும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கோகோ கோலா நிறுவனம் கையகப்படுத்தியது.
சந்தை மாற்றம்
சர்க்கரை இல்லாத பானங்களை நோக்கிய சந்தை மாற்றம்
இந்தியக் குளிர்பானச் சந்தையில் புதிய நிறுவனங்களின் வருகையாலும், ஏற்கனவே உள்ள போட்டியாளர்களின் ஆதிக்கத்தாலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, நுகர்வோர் மத்தியில் சர்க்கரை இல்லாத மற்றும் குறைந்த கலோரி கொண்ட பானங்களை நோக்கிய ஆர்வம் வேகமாக அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கோகோ கோலா நிறுவனத்தின் குறைந்த கலோரி மற்றும் சர்க்கரை இல்லாத பானங்களின் விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடனும், இன்றைய நவீன நுகர்வோரின் ஆரோக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கோல்ட் ஸ்பாட் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.