AI முன்னேற்றதிகாக 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்திய அரசு
இந்திய அரசு, AI மிஷனுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.10,372 கோடியில் இருந்து சுமார் ரூ.5,000 கோடியை GPU களில் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிதியின் பெரும்பகுதி NVIDIA க்கு செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த நிதியின் பெரும் பகுதி, மேம்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை(GPU) வாங்குவதற்கும், இந்திய தொடக்க நிறுவனங்களுக்கு மானிய விலையில் அதை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்(MeitY) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற குளோபல் இந்தியா AI உச்சி மாநாட்டில் அவர் இதை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் மெஷின் லேர்னிங் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், வேகமான தரவு செயலாக்கத்தை செயல்படுத்துவதற்கும் உதவும் சில்லுகள் GPUகள் ஆகும்.
10,000க்கும் மேற்பட்ட GPUகளைப் பெற இந்தியா திட்டம்
NVIDIA, இன்டெல் மற்றும் ஏஎம்டி போன்ற முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த சில்லுகள் சக்திவாய்ந்த மற்றும் திறமையான AI அமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான கூறுகளாகும். இந்த GPU களில் முதலீடு செய்வதன் மூலம், AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கணக்கீட்டு திறன்களை அதிகரிப்பதை இந்திய அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. MeitY இன் கூடுதல் செயலாளர் அபிஷேக் சிங், 10,000க்கும் மேற்பட்ட GPUகளைப் பெறுவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.5,000 கோடியை ஒதுக்கியுள்ளது என்று கூறியுள்ளார். இந்த முயற்சி இந்தியாவின் AI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.