2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்களில் கௌதம் அதானி முதலிடம்; ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு
ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் அறிக்கை 2024இன் படி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த ஆண்டில் அதிக செல்வம் ஈட்டியவராக உருவெடுத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஓபி ஜிண்டால் குழுமத்தின் எமரிட்டஸ் தலைவர் சாவித்ரி ஜிண்டால் ஆகியோரின் நிகர மதிப்பின் கூட்டு லாபத்தை விட இந்த அதிகரிப்பு அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, கௌதம் அதானி 48 பில்லியன் டாலர்கள் கூடுதலாக ஈட்டி முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது பெரிய லாபம் பெற்றவராக முகேஷ் அம்பானி உள்ளார். அவர் 2024ஆம் ஆண்டில் 27.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றார். இதன் மூலம் அவரது நிகர மதிப்பு 119.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, சொத்து அதிகரிப்பில் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தில் பின்தங்கி இருந்தாலும், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 119.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். மறுபுறம், கௌதம் அதானி 116 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான சர்ச்சையில் சிக்கி பங்குச் சந்தையில் சொத்துக்களை இழந்தது ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு காரணமாக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சாவித்ரி ஜிண்டால் இந்த ஆண்டில் 19.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக பெற்று மொத்தம் 43.7 பில்லியன் டாலர் சொத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.