போன் ஸ்கிரீன் ஹேங் ஆகுதா? பேங்க் அக்கவுண்ட்டைக் காலி செய்யும் புதிய யுபிஐ மோசடி
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதள விளம்பரங்கள் அல்லது அறிமுகமில்லாத லிங்க்களை க்ளிக் செய்யும் போது, ஸ்மார்ட்போன் திடீரென இயங்காமல் ஃப்ரீஸ் ஆவது சாதாரணத் தொழில்நுட்பக் கோளாறாகத் தோன்றலாம். ஆனால், பயனர்களை பதற்றமடையச் செய்து, அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சுருட்டும் புதிய ரக சைபர் கிரைம் மோசடியாக இது உருவெடுத்துள்ளது. போன் ஹேங் ஆகிவிட்டது என்று நம்ப வைத்து, பயனர்களின் முக்கியமான நிதித் தகவல்களைத் திருட ஹேக்கர்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஹேக்கர்கள்
பயனர்களின் பயத்தைப் பயன்படுத்தும் ஹேக்கர்களின் தந்திரம்
இதுகுறித்த என்டிடிவி அறிக்கையின்படி, குவிக் ஹீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹரீஷ் குமார், ஸ்கிரீன் ஃப்ரீஸ் ஆவது ஒரு கோளாறு அல்ல, அது பயனர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம் என எச்சரிக்கிறார்.
போனில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக போலியான மெசேஜ்களை அனுப்பி, வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பயமுறுத்துவார்கள்.
பின்னர், சிக்கலை சரிசெய்ய அல்லது கேஷ்பேக் பெற பிரத்யேக APK ஃபைலை பதிவிறக்கம் செய்ய வைத்து போனின் கட்டுப்பாட்டைத் தங்களின் கைக்குள் கொண்டு வருகிறார்கள்.
அனுமதிகள்
OTP மற்றும் மெசேஜ்களைப் படிக்கும் ஆபத்தான அனுமதிகள்
இந்தத் தேவையில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது, அவை போனின் ஆக்ஸசிபிலிட்டி (Accessibility) மற்றும் நோட்டிஃபிகேஷன் அனுமதிகளைத் துஷ்பிரயோகம் செய்கின்றன.
இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களின் வங்கி OTP எண்களைப் படிப்பதுடன், திரையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துப் போலியாக பரிவர்த்தனைகளை செய்கின்றனர்.
யுபிஐ குறியாக்கத்தை (Encryption) உடைப்பதற்குப் பதிலாக, பயனர்களைத் தவறாக வழிநடத்தி அவர்களையே அறியாமல் யுபிஐ பின் எண்ணைப் பதிவிட வைப்பதே ஹேக்கர்களின் முதன்மை உத்தியாக உள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள்
இந்த மோசடியில் இருந்து தப்பிக்கும் பாதுகாப்பு வழிமுறைகள்
உங்கள் போன் திடீரென சந்தேகத்திற்கு இடமான வகையில் ஹேங் ஆனால், உடனடியாக மொபைல் டேட்டா மற்றும் வைஃபை இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்.
தெரியாத நபர்கள் கூறும் அறிவுறுத்தல்களின்படி எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது யுபிஐ பின் எண்டர் செய்யவோ கூடாது.
ஒருவேளை உங்கள் பண இழப்பு ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு அழைத்துப் புகார் அளிப்பதுடன், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கணக்கை முடக்க வேண்டும்.