LOADING...
இந்தியாவின் மாபெரும் தொழிலாளர் சீர்திருத்தம்: 29 சட்டங்களுக்குப் பதிலாக 4 புதிய சட்டக் கோவைகள் அமல்
இந்தியாவின் மாபெரும் தொழிலாளர் சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மாபெரும் தொழிலாளர் சீர்திருத்தம்: 29 சட்டங்களுக்குப் பதிலாக 4 புதிய சட்டக் கோவைகள் அமல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2025
04:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா தனது தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, நான்கு புதிய தொழிலாளர் சட்ட கோவைகளை (labour codes) அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொழிலாளர் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய சட்ட கட்டமைப்பு, பல தசாப்தங்களாக பழமையான, சிதறியுள்ள விதிகளை சுலபமாக்குவது, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவது, பாதுகாப்பு தரங்களை பலப்படுத்துவது மற்றும் நாட்டின் தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய சிறந்த முறைகளுக்கு இணையாகக் கொண்டுவருவது ஆகியவற்றை முதன்மை இலக்காக கொண்டுள்ளது. இந்த புதிய மாற்றம், "பாதுகாக்கப்பட்ட, எதிர்காலத்திற்குத் தயாரான பணியாளர்களை" உருவாக்கும் என்று அரசு வலியுறுத்துகிறது.

கோவைகள்

ஒன்றிணைக்கப்பட்ட சட்டங்கள்

சம்பளக் கோவை (2019), தொழில் உறவுகள் கோவை (2020), சமூகப் பாதுகாப்பு கோவை (2020), மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் கோவை (2020) ஆகிய இந்த நான்கு கோவைகளும் வேலைவாய்ப்பின் பல்வேறு அம்சங்களில் விரிவான மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் செயல்முறை நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

தாக்கங்கள்

புதிய சட்ட கோவைகளின் முக்கிய தாக்கங்கள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஊதியத்துக்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது, இது முன்னர் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே இருந்தது. இந்தச் சட்டம் Gig மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை கட்டாயமாக்குகிறது. அதாவது, அவர்களுக்கு PF, ESIC மற்றும் காப்பீடு போன்ற பலன்கள் கிடைக்கின்றன. மேலும், இவர்களது நல நிதிக்காக, ஆக்ரிகேட்டர்கள் முதலில் 1-2% பங்களிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் இலவச உடல்நலப் பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களில் கட்டாயப் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

சமத்துவம்

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்மதத்துடன் சுரங்கத் தொழில்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இரவுப் பணி செய்ய இந்தச் சீர்திருத்தங்கள் அனுமதிக்கின்றன, மேலும் சம ஊதியம் உறுதி செய்யப்படுகிறது. வணிகங்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஒரு ஒரே பதிவு, ஒரே உரிமம் மற்றும் ஒரே ரிட்டர்ன் என்ற செயல்முறை மூலம் இணக்கச் சுமை வெகுவாகக் குறைக்கப்படுகிறது. ஒரு வருட சேவைக்குப் பிறகு கிராஜுவிட்டி உட்பட, நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் அனைத்துச் சலுகைகளுக்கும் வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தத்தில் உள்ள ஊழியர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.