விமான பயணிகளுக்கு கூடுதல் பணமா? GSTAT தீர்ப்பும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய ரீஃபண்ட் விதிகளும்
செய்தி முன்னோட்டம்
விமானங்கள் ரத்து செய்யப்படும் போது பயணச்சீட்டின் கட்டணம் மட்டுமின்றி, அரசிடம் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொகையும் விமான நிறுவனங்களுக்கும் வரித் துறைக்கும் இடையே பெரும் சர்ச்சைக்குரிய பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (GSTAT) எர்ணாகுளம் அமர்வு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பயணிகளுக்கு ஜிஎஸ்டி உட்பட முழுத் தொகையையும் திரும்ப அளித்த விமான நிறுவனங்கள், அரசிடம் தாங்கள் ஏற்கனவே செலுத்திய ஜிஎஸ்டி வரியை ரீஃபண்டாகப் பெறத் தகுதியுடையவர்கள் என தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழக்கு பின்னணி மற்றும் GSTAT உத்தரவு
அக்டோபர் 2019 முதல் மார்ச் 2021 வரையிலான கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்காக பயணிகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜிஎஸ்டி உட்பட முழுத் தொகையையும் திருப்பியளித்தது.
ஆனால் அத்தொகையைத் தனது அவுட்புட் வரிப் பொறுப்பில் கிரெடிட் நோட் மூலம் ஈடுகட்ட முடியாமல் போனதால், ₹45.92 லட்சம் ஜிஎஸ்டி தொகையை ரீஃபண்டாகக் கோரியது.
இதை வரித் துறை நிராகரித்த நிலையில், மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் உரிய சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இரண்டு வாரங்களுக்குள் வட்டியுடன் அத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது.
ரீஃபண்ட் பணம்
பயணிகளுக்கு இதிலிருந்து கூடுதல் ரீஃபண்ட் பணம் கிடைக்குமா?
இத்தீர்ப்பு வெளியானவுடன் பயணிகளுக்குக் கூடுதல் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், இத்தீர்ப்பு அரசிடம் விமான நிறுவனம் தான் செலுத்திய வரியை திரும்பப் பெறுவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதால், பயணிகளுக்கு தானாக கூடுதல் பணம் எதுவும் கிடைக்காது.
ஒரு விமானம் ரத்து செய்யப்படும் போது பயணச்சீட்டை வாங்கும் போதே பயணி செலுத்திய ஜிஎஸ்டி தொகை விமான நிறுவனத்தால் ஏற்கனவே பயணிகளுக்கு திருப்பி செலுத்தப்பட்டிருந்தால், அந்தத் தொகையை அரசாங்கம் விமான நிறுவனத்திற்குத் திரும்பத் தர வேண்டும் என்பதே இதன் நடைமுறை உண்மையாகும்.
புதிய ரீஃபண்ட் விதிகள்
DGCA 2026 புதிய ரீஃபண்ட் விதிகள் மற்றும் பயணிகளின் உரிமைகள்
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மார்ச் 26, 2026 முதல் திருத்தப்பட்ட புதிய ரீஃபண்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் கீழ், விமான நிறுவனங்கள் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு எவ்விதக் கூடுதல் ரீஃபண்ட் செயலாக்கக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
மேலும் கிரெடிட் கார்டு மூலம் பதிவு செய்திருந்தால் 7 நாட்களுக்குள்ளும், முகவர்கள் அல்லது ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் பதிவு செய்திருந்தால் 14 வேலை நாட்களுக்குள்ளும் சட்டப்பூர்வ வரிகள் மற்றும் ஏர்போர்ட் கட்டணங்கள் உட்பட முழுத் தொகையையும் திரும்ப அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.