₹55இல் இருந்து ₹18,000 வரை: 1 முதல் 7வது ஊதியக் குழு வரை மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய வளர்ச்சிப் பாதை
செய்தி முன்னோட்டம்
இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஊதியக் குழுக்களின் வரலாறு, கடந்த 70 ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 1946இல் அமைக்கப்பட்ட முதல் ஊதியக் குழு முதல் தற்போது அமலில் உள்ள 7வது ஊதியக் குழு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் ஊழியர்களின் அடிப்படைத் தேவைகள், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் இந்த ஊதியக் குழுக்கள், அரசு ஊழியர்களின் நிதி நிலைமையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 8வது ஊதியக் குழு விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், முந்தைய ஊதியக்குழுக்களின் ஊதிய உயர்வை இதில் விரிவாக பார்க்கலாம்.
ஊதிய நிர்ணயம்
தொடக்க கால ஊதியக் குழுக்கள் மற்றும் ஊதிய நிர்ணயம்
இந்தியாவின் முதல் ஊதியக் குழு 1946-47 காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. அப்போது குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வெறும் 55 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2,000 ரூபாயாகவும் இருந்தது. அதனைத் தொடர்ந்து 1957இல் அமைக்கப்பட்ட 2வது ஊதியக் குழுவில் 14.2% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் 80 ரூபாயாக உயர்ந்தது. 1972-73-ல் வந்த 3வது ஊதியக் குழு 20.6% உயர்வையும், 1983-86-ல் அமைக்கப்பட்ட 4வது ஊதியக் குழு 27.6% உயர்வையும் வழங்கின. 4வது ஊதியக் குழுவின் முடிவில் குறைந்தபட்ச ஊதியம் 750 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 8,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
6வது ஊதியக் குழு
நவீன கால மாற்றங்கள் மற்றும் 6வது ஊதியக் குழுவின் சாதனை
1994இல் அமைக்கப்பட்ட 5வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்கு 31% ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் 2,550 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதன்பின்னர் 2006இல் அமைக்கப்பட்ட 6வது ஊதியக் குழுதான் இந்திய வரலாற்றிலேயே மிக அதிகப்படியான ஊதிய உயர்வை வழங்கிய குழுவாகக் கருதப்படுகிறது. இக்குழுவின் பரிந்துரையால் ஊழியர்களுக்கு 54% ஊதிய உயர்வு கிடைத்தது. இதன் விளைவாகக் குறைந்தபட்ச ஊதியம் 7,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 80,000 ரூபாயாகவும் உயர்ந்தது. இது அரசு ஊழியர்களின் வாங்கும் சக்தியைப் பெருமளவில் அதிகரித்தது.
7வது ஊதியக் குழு
7வது ஊதியக் குழு மற்றும் தற்போதைய நிலை
தற்போது நடைமுறையில் உள்ள 7வது ஊதியக் குழு 2014 இல் அமைக்கப்பட்டு 2016 முதல் அமல்படுத்தப்பட்டது. இக்குழுவின் மூலம் ஊழியர்களுக்கு 14.3% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதன்படி, குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2,50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வரும்போது, மீண்டும் ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஊதியக் கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படும்.