LOADING...
PF வாடிக்கையாளர்கள் இனி 3 நாள் காத்திருக்க வேண்டாம்; UPI பின் போட்டால் உடனே அக்கவுண்டிற்கு வரும் பணம்
இந்தியாவில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான சம்பள வர்க்க ஊழியர்கள் பெரும் பயனடைவார்கள்

PF வாடிக்கையாளர்கள் இனி 3 நாள் காத்திருக்க வேண்டாம்; UPI பின் போட்டால் உடனே அக்கவுண்டிற்கு வரும் பணம்

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2026
06:03 pm

செய்தி முன்னோட்டம்

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன (EPFO) சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காகப் பிஎஃப் (PF) பணத்தை இனி யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற தளங்கள் வழியாக மிக எளிதாகவும், உடனடியாகவும் எடுப்பதற்கான புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான சம்பள வர்க்க ஊழியர்கள் பெரும் பயனடைவார்கள். இப்புதிய டிஜிட்டல் வசதிக்கான தொழில்நுட்ப சோதனை ஓட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். யுபிஐ கேட்வே மூலம் எடுக்கப்படும் பிஎஃப் தொகையானது, ஊழியர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாகவும், உடனடியாகவும் மாற்றப்படும் என்று அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நடைமுறை

இனி பிஎஃப் பணம் எடுப்பது எப்படி?

தற்போது நடைமுறையில் உள்ள சிக்கலான கிளைம் செய்யும் முறைகளுக்கு மாற்றாக இந்த யுபிஐ தொழில்நுட்பம் கொண்டு வரப்படுகிறது. EPFO செயலியில் சந்தாதாரர்கள் தங்களின் கணக்கில் எடுக்கக்கூடிய தொகையைப் பார்த்துவிட்டு, UPI மூலம் பணப் பரிவர்த்தனையைத் தொடங்கலாம். பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தங்களின் இணைக்கப்பட்ட UPI PIN எண்ணை உள்ளீடு செய்து கணக்கை அங்கீகரிக்க வேண்டும். பணம் வங்கி கணக்கிற்கு வந்தவுடன், அதனைத் டிஜிட்டல் முறையிலோ அல்லது ஏடிஎம் கார்டுகள் மூலமாகவோ உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது அமலில் உள்ள தானியங்கி தீர்வு முறை மூலம் 3 நாட்களில் பணம் கிடைக்கும் நிலையில், இனி இந்த யுபிஐ முறை மூலம் காத்திருப்பு காலம் சில நிமிடங்களாகக் குறையும்.

சேவை

வாட்ஸ்அப் மூலம் புதிய சேவைகள்

யுபிஐ வசதி தவிர, வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் இபிஎஃப்ஓ சேவைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. EPFO-இன் அதிகாரப்பூர்வ 'கிரீன் டிக்' பெற்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு "Hello" என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம், PF கணக்கு பேலன்ஸ், சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் கிளைம் நிலவரங்களை பிராந்திய மொழிகளிலேயே தெரிந்து கொள்ளலாம். அவசரக் காலங்களில் மருத்துவச் செலவு, திருமணம், கல்வி மற்றும் வீட்டுத் தேவைகளுக்காகப் பிஎஃப் பணத்தை எடுக்க நினைப்போருக்கு இந்த யுபிஐ மற்றும் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக அமையும். ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு அண்மையில் ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement