பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா? 34 கோடி பேருக்கு வட்டிப் பணம் கிரெடிட்! பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) தனது கோடிக்கணக்கான சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டிப் பணத்தை வரவு வைத்துள்ளது. அதன்படி, 2025-26 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டித் தொகையானது சுமார் 34 கோடி உறுப்பினர்களின் கணக்குகளில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் முழுமையாக ஏற்றி முடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் அல்லது நவம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த செயல்முறை, இபிஎஃப்ஓ வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு மிக விரைவாக ஜூலை மாத பாதியிலேயே முடிக்கப்பட்டுள்ளது பிஎஃப் சந்தாதாரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காரணம்
இந்த ஆண்டு இவ்வளவு விரைவாக வட்டி ஏற என்ன காரணம்?
இபிஎஃப்ஓ அமைப்பின் இந்த நடைமுறை மாற்றத்திற்கு அதன் புதிய மத்தியமயமாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத் தளமே (CITES) முக்கியக் காரணமாகும்.
இதற்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள 123 மண்டல அலுவலகங்கள் தனித்தனி தரவுத்தளங்களை பராமரித்து வந்ததால் சரிபார்ப்புப் பணிகளுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டது.
தற்பொழுது ஜூன் 30க்குள் இவை அனைத்தும் ஒரே தேசிய தரவுத்தளமாக இணைக்கப்பட்டு, சுமார் 1700 கோடி பதிவுகள் மற்றும் 1400 கோடி நிதியியல் பரிவர்த்தனைகள் கணினிமயமாக்கப்பட்டதால், ரூ.1.44 லட்சம் கோடி வட்டிப் பணம் ஒரே நேரத்தில் தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு உறுப்பினர்களின் கணக்குகளில் ஏற்றப்பட்டுள்ளது.
சரிபார்க்கும் வழிகள்
பிஎஃப் பேலன்ஸ் மற்றும் வட்டிப் பணத்தை சரிபார்க்கும் 4 எளிய வழிகள்
சந்தாதாரர்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட பிஎஃப் கணக்கு விபரங்களையும், வட்டிப் பணம் ஏறியுள்ளதா என்பதையும் பின்வரும் நான்கு எளிய வழிமுறைகளின் மூலம் எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ பாஸ்புக் இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களது 12 இலக்க யுஏஎன் எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.
பின்னர், இதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, 'View Passbook' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து வட்டி விவரங்களை அறியலாம்.
இதர வழிகள்
வட்டிப் பணத்தை சரிபார்க்கும் வழிகள்
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உமாங் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது யுஏஎன் எண்ணை இணைப்பதன் மூலம் நேரடியாக மொபைலிலேயே பிஎஃப் பேலன்ஸ் மற்றும் நடப்புப் பங்களிப்புகளைப் பார்க்க முடியும்.
உங்களது யுஏஎன் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டு, சரியான மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட இபிஎஃப்ஓ வடிவத்தில் 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம், உங்களது கணக்கு இருப்பு மற்றும் கேஒய்சி நிலவரத்தை வட்டார மொழிகளிலேயே பெறலாம்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து இபிஎஃப்ஓவின் பிரத்யேக எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமும் உங்களது அண்மைக்கால கணக்கு இருப்பு விவரங்களை உடனடியாக குறுஞ்செய்தியாகப் பெற முடியும்.
வரவில்லை என்றால்?
இன்னும் வட்டிப் பணம் ஏறவில்லை என்றால் பதற்றமடைய வேண்டாம்
ஒருவேளை உங்களது கணக்கில் வட்டித் தொகை தற்பொழுது உடனடியாகக் காட்டப்படவில்லை என்றாலும் சந்தாதாரர்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952, பிரிவு 60-இன் படி, வட்டித் தொகையானது மாதாந்திர நடப்பு இருப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், கணினியில் விபரங்கள் புதுப்பிக்கப்பட சில நாட்கள் தாமதமானாலும் உறுப்பினர்களுக்கான வட்டி வருவாயில் எந்தவித இழப்பும் ஏற்படாது.
கேஒய்சி அப்டேட்
சரியான கேஒய்சி அப்டேட்களின் முக்கியத்துவம்
இபிஎஃப்ஓ தற்பொழுது சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கையாண்டு வருகிறது.
இதில் 8 கோடி கணக்குகள் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள தீவிரப் பங்களிப்புக் கணக்குகளாகும்.
பெரிய அளவிலான பிஎஃப் வைப்புத்தொகை வைத்திருப்பவர்களுக்கு இந்த 8.25% வட்டி விகிதம் கணிசமான லாபத்தை அளிக்கும்.
உதாரணமாக, கணக்கில் 10 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருப்பவருக்கு ஆண்டு வட்டியாக சுமார் ரூ.82,500 வரவு வைக்கப்படும்.
இந்த சேவைகளைத் தடையின்றிப் பெற, சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் கணக்கை ஆக்டிவேட் செய்து வைப்பதோடு, மொபைல் எண்களுடன் கூடிய சரியான கேஒய்சி விபரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியமாகும்.